kumary1
குமரி மாவட்டத்தில் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். இரணியல் பகுதியில் அவர் பிரசாரம் செய்த போது அங்கு தேர்தல் கமிஷனின் உரிய அனுமதி பெறாமல் கூட்டணி கட்சிகளின் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் கட்டியிருந்ததாக இரணியல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரி புகார் செய்தார்.
அதன்பேரில் இரணியல் பகுதி தே.மு.தி.க. மற்றும் த.மா.கா., மக்கள் நல கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஞாலம் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி பூதப்பாண்டி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஞாலம் பகுதியில் தேர்தல் கமிஷனின் விதிகளை மீறி ஞாலத்தில் உள்ள அரசு அலுவலக சுவரில் அ.தி.மு.க. கொடி, சின்னங்கள் வரையப்பட்டிருப்பதாகவும், அதனை வரைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை துணை செயலாளர் ஞாலம் ஜெகதீஸ் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.