saudi_maid_002

ரியாத்:

வுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் தமிழக பெண்ணின் கை துண்டானதற்கு காரணம், அவர் தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்ததுதான் என்று சவுதி காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (வயது 55). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் அரபி ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்வதற்காக சென்றார்.

சமீபத்தில், வலது கை துண்டான நிலையில், ரியாத் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். வேலை பார்த்த வீட்டில் இருந்து தப்பிஓட முயற்சிக்கும்போது தவறி விழுந்ததால்தான் கை துண்டாகி விட்டதாக வீட்டு உரிமையாளர் கூறினார்.

ஆனால், வீட்டுக்காரரின் கொடுமை தாங்காமல், தப்பிஓட முயன்றதற்காக, கஸ்தூரியின் கையை வீட்டுக்காரர் வெட்டி விட்டதாக கஸ்தூரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். .இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு, கஸ்தூரியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில் “தப்பிஓட முயன்றபோது தவறி விழுந்ததால்தான், கஸ்தூரியின் கை துண்டானது” என்று வீட்டு உரிமையாளர் கூறியதையே ரியாத் நகர காவல்துறையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரியாத் காவல்துறை செய்தித்தொடர்பாளர் பவாஸ் அல்–மைமான் கூறியதாவது:

வீட்டு வேலைக்கு சேர்ந்த கஸ்தூரி, மன உளைச்சலுடனே இருந்திருக்கிறார். அவர் வேலை செய்யும் வீடு, அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. எனவே, ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்புவதற்காக, அவர் பழைய துணிகளைக் கொண்டு கயிறு போல் கட்டி, தப்ப முயன்றிருக்கிறார் அப்போது தவறி விழுந்தார். கீழே இருந்த ஜெனரேட்டரின் முனையில் அவரது வலது கை பட்டதால், அந்த இடத்திலேயே கை துண்டானது.   நேரில் கண்ட சாட்சிகளும் இதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து வந்த வீட்டுக்காரர்,, அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தற்போது இந்த வழக்கு, புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பிரிவிடம் வழக்கு கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள அனைவருமே சமமாக நடத்தப்படுவார்கள்.. அனைவருக்கும் ஒரே சட்டம்தான்” என்று அவர் கூறினார்.

ஆனால் சவுதி அரேபியாவுக்கு பணிக்குச் செல்லும் வெளிநாட்டவர்அதிக நேர வேலை, கடினமான பணி, உணவு மறுத்தல், பெண்களுக்கு பாலியல் தொல்லை என்று பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவது பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானபடியே இருக்கின்றன.

சமீபத்தில்கூட வேலைக்காக சவுதி சென்ற இளைஞர்கள் இருவர், கொடுமை தாங்காமல் தங்களது நிலையை வாட்ஸ்அப்பில் தெரிவிக்க.. பலரும் உதவி அவர்களை தமிழகம் கொண்டு வந்தனர்.

சமீபத்தில் இந்திாயவுக்கான சவுதி தூதுவர் நேபாள பெண்கள் இருவரை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவானது. அதே போல சவுதி இளவரசர் மீது அமெரிக்காவில் பணிப்பெண் ஒருவர் புகார் கொடுத்த நிகழ்வும் நடந்தது.

அமெரிக்காவில் சவுதி இளவரசர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இந்தியாவில் இருந்து சவுதி தூதர் தனது நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீட்டு வேலைக்குச் சென்ற கஸ்தூரி “கொடுமைப்படுத்தப்படவில்லை.. தானாகவே கீழே விழுந்து கை துண்டானது” என்று சவுதி காவல்துறை கூறியிருப்பது பொய்யாகவே இருக்கும் என்பதே பலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இதற்காக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.