சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக இன்று கோர்ட்டில் ஆஜரானார் அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த ஒளிப்படம்தான் இப்போது புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கறிஞர் பாசு. மணிவண்ணன், “நீதிமன்றத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது. இது நீதிமன்ற மாண்புக்கு உகந்தது அல்ல. ஆகவே கருணாநிதி மீது, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் புகார் கொடுக்கப்போகிறேன்” என்று நம்மிடம் கூறினார்.
இது குறித்து தி.மு.க. பிரமுகரும் வழக்கறிஞருமான கே.எஸ் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், “நீதிமன்றத்துக்குள் ஒளிப்படம் எடுப்பதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் பல நேரங்களில் அப்படி படம் எடுக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
உதாரணமாக சொல்லவேண்டுமானால், இந்திரா காந்தி காலத்தில், அவர் மற்றும் சஞ்சய் காந்தி மீதான வழக்கு நடந்தபோது, அப்படி கோர்ட்டுக்குள்ளேயே படங்கள் எடுக்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியானது வரலாறு. அப்போது கோர்ட்டில் நடந்த ரகளைகளும் படங்களுடன் செய்தியாக வெளியானது உண்டு.
அவ்வளவு ஏன், காந்தி கொலை வழக்கு நடந்தபோதும் கோர்ட்டுக்கள் படம் எடுக்கப்பட்டு வெளியானதே!
தவிர, ஒளிப்படம் எடுக்கக்கூடாது என்று அணுமின் நிலையங்கள், அணைக்கட்டுகளில் பலகை வைக்கப்பட்டிருக்கும். அது போன்ற அறிவிப்புகள் கோர்ட்டில் இல்லையே. ஒரு பெரிய தலைவர் நீதிமன்றத்துக்கு வருகிறார் என்றால், அவரது தொண்டர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானவர்கள் வருவார்கள். அவர்களில் பலருக்கு நீதி்மன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியாது. அப்படிப்பட்டவர்கள் ஒளிப்படம் எடுத்திருப்பார்கள். அதுவும், இப்போது கேமரா இல்லாத செல்போன்களே இல்லை என்றாகிவிட்டது. இந்த நிலையில் யார் படம் எடுத்தார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாது.
இந்த நிலையில், கோர்ட்டுக்கள் ஒளிப்படம் எடுத்தார்கள் என்பதை எல்லாம் பிரச்சினை ஆக்குவது சரியாகப்படவில்லை. தவிர, வழக்கறிஞர்கள், கோர்ட்டில் மட்டும்தான் கவுன் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் எத்தனை பேர் அதை கடைபிடிக்கிறார்கள்?” என்ற கேள்வியோடு முடித்தார் கே. எஸ். ராதாகிருஷ்ணன்.