தெஹ்ரான்:
போதை கடத்தல் குற்றச்சாட்டுக்காக ஈரானில் ஒரு கிராமத்தை சேர்ந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஈரானை சேர்ந்த கல்வியாளரும் பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருமான ஷாகின்தோக்த் மோலவேர்தி கூறியிருப்பதாவது:
ஈரானில் சிஸ்டன் மற்றும் பாலுசெஸ்டன் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் வசித்த ஒவ்வொரு ஆணும் போதை கடத்தல் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது அவர்களது குழந்தைகள் முழு நேர போதை கடத்தல்காரர்களாக மாறியுள்ளனர். தங்களது தந்தையின் மரணத்துக்கு அரசை பழிவாங்குவதற்காகவோ அல்லது குடும்பத்தை நடத்த ஏற்படும் பண பற்றாகுறை காரணமாகவோ இவ்வாறு மாறியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யாதது தான் இந்த நிலைக்கு காரணம்.
இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டார்களா அல்லது குறிப்பிட்ட காலத்தில் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இது போல் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் தூக்கில் போடப்படுகின்றனர். எனினும் மரண தண்டனை போதை கடத்தலை குறைக்கவில்லை என ஈரான் அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர். கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் 2015ம் ஆண்டில் தான் அதிகமானோர் தூக்கில் போடப்படடுள்ளனர்.
அதனால் ஈரானக்கு ஆயுதம், நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்த உதவிகளையும் ஐ.நா வழங்க கூடாது என் மனித உரிமை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானில் 74 சதவீத மரண தண்டனை போதை கடத்தல் தொடர்பானது தான் என 2011ம் ஆண்டில் ஈரானின் மனித உரிமை உச்ச குழு தெரிவித்தது. இவர்கள் ஓபியம் என்ற போதை பொருளை ஆப்கானிஸ்தானுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கடத்தலில் ஈடுபட்டவர்கள்.
2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 947 மரண தண்டனைகளில் 600 பேர் போதை கடத்தல் குற்றவாளிகள். இந்த ஆண்டு இது வரை 31 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றியதல் சீனா முதலிடத்ததிலும், ஈரான் இரண்டாம் இடத்திலும் உள்ளது. சவுதி அரேபியா 3ம் இடத்தை பிடித்துள்ளது.