டெல்லி: காற்று மாசுபாடு எதிரொலியாக, 40 சதவீதம் மக்கள், தலைநகர் டெல்லியை விட்டு வேறு நகரங்களுக்கு இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் டெல்லியை பாடாய்படுத்தி வருகிறது காற்று மாசுபாடு. பள்ளிகள் விடுமுறை, விமான போக்குவரத்தில் மாற்றம் என மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந் நிலையில் 40 சதவீதம் மக்கள் டெல்லியை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணியுள்ளதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள 17,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
அவர்களில் 13 சதவீதம் பேர் வேறு வழியில்லை, இருக்க வேண்டுமே என்று கருத்து தெரிவித்து உள்ளனர். 40 சதவீதம் பேர் டெல்லியில் இருந்து இடம்பெயர்ந்து வேறு ஏதேனும் நகரங்களுக்கு சென்றுவிட விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.
31 சதவீதம் டெல்லியில் இருக்க விரும்புகின்றனர். ஆனால், காற்றை சுத்தப்படுத்தும் கருவி, முகமூடி உள்ளிட்ட வழிகளை பயன்படுத்தி வசிக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். காற்று மாசுடன் பயணிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, 13 சதவீதம் பேர் குடும்பத்தில் யாராவது இந்த கோளாறால் மருத்துவமனைக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தவிர, மேலும் 29 சதவீதம் ஏற்கனவே மருத்துவரை சந்தித்து, சிகிச்சை எடுத்துக் கொண்டுவிட்டதாக கூறுகின்றனர். எங்களுக்கு உடல்நல கோளாறு இருக்கிறது, ஆனால் மருத்துவரிடம் சென்று பார்ப்பது இல்லை என்பது 44 சதவீதம் பேரின் கருத்தாகும்.
வெறும் 14 சதவீதம் பேர் தான், எங்களுக்கு எந்த உடல்பாதிப்பும் இல்லை,காற்று மாசடைந்து இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று கூறி இருக்கின்றனர்.