சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 10 முதல் 17ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 216 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர். . இதையடுத்து, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 31 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள்
இதன்படி மாவட்ட தலைநகரங்களில் நேர்காணல் தொடங்கியது. சென்னை மாவட்டத்துக்கான நேர்காணல் மாநில தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது குஷ்புவும் உடனிருந்தார்.
நேர்காணலின் போது, “ எத்தனை ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறீர்கள்? வகித்த பதவிகள் என்னென்ன? தொகுதிக்கு ஆற்றிய பணிகள் என்ன? போட்டியிட விரும்பும் தொகுதியில் கட்சி செல்வாக்கு எப்படி” என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும்,”கூட்டணி கட்சியான தி.மு.கவுக்கு அந்த தொகுதியில் எவ்வளவு ஆதரவு உள்ளது? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? . அதற்கான நிதி ஆதாரம் என்ன? தொகுதியில் அதிகமாக உள்ள ஜாதி எது?” போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
இந்த நேர்காணலை ப.சிதம்பரம் ஆதரவு மாவட்டத் தலைவர்களான கராத்தே தியாகராஜன் (தென் சென்னை), புஷ்பராஜ் (புதுக்கோட்டை), சத்திய மூர்த்தி (சிவகங்கை), வெங்கடாசலம் (திருப்பூர்), ரவிச்சந்திரன் (மதுரை வடக்கு), ராதாகிருஷ்ணன் (கடலூர்), ஆர்.சி.பாபு (திருச்சி), பி.ஜி.ராஜேந்திரன் (தஞ்சாவூர்) மற்றும் தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்களும் புறக்கணித்து விட்டனர்.
மேலும் இவர்கள்,” தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனைத்து அணியினரையும் அரவணைத்துச் செல்லாமல் தன்னிச்சையாக விருப்ப மனுக்கள் பெற்று, நேர்காணல் நடத்தி வருகிறார். எனவே, இந்த நேர்காணலை புறக்கணித்துள்ளோம். இது குறித்து ராகுல்காந்தியிடம் புகார் தெரிவிக்கப்போகிறோம்” என்று கூறி வருகிறார்கள்.