லக்னோ
காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் இணைந்து கலந்துக் கொண்ட நிகழ்வு ஒன்று நடந்தது. காங்கிரஸ் பொதுச் செயலர் மற்றும் உ பி மாநில கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு பிரியங்கா கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் ஊர்வலமாக சென்று மக்களை சந்தித்தார்.
அவர்களுடன் மேற்கு உத்திரப்பிரதேச மாநில பொறுப்பாளனரான ஜோதித்ராதிய சிந்தியாவும் சென்றார். கூட்டத்தினரிடையே ராகுல் காந்தி, “மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் காங்கிரஸ் நோக்கம் இல்லை. உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் ஆகும். அந்த நோக்கத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு நிறைவேற்றும்.
நாட்டின் மத்திய பகுதியான உ பி யில் ஆட்சியை அமைக்கும் வரை காங்கிரஸ் கட்சி சோம்பலாக இருக்காது. ஆட்சியை அமைக்கும் பொறுப்பு பிரியங்காவிடமும் சிந்தியாவிடமும் அளிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என நான் அவர்களுக்கு கூறி இருக்கிறேன். உ பி மக்களுக்கு நீதி கிடைப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்
நாட்டில் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பணத்தை எடுத்த பிரதமர் மோடி அதை தொழிலதிபர் அனில் அம்பானியிடம்கொடுத்து விட்டார். அதனால் தான் காங்கிரஸ் கட்சி காவலாளியே திருடன் ஆனார் என முழக்கம் இடுகிறது. நீங்களும் அதே கோஷத்தை எழுப்புங்கள்” என கூறினார்.
அப்போது கூட்டத்தினர் “காவலாளியே திருடன் ஆனார்” என கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.