evks thangabalu

மிழக காங்கிரஸை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் ஒற்றுமையை எதிர்பார்க்கலாம். தலைவராக இருப்பவரை பதவியைவிட்டு இறக்க மற்ற அனைவரும் ஒன்று கூடுவார்கள்.

இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வேண்டும் என்று கோரி மற்ற சில தலைவர்கள் கடந்த திங்கள் கிழமை டில்லியில் சோனியாகாந்தியை சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அவர்களில் ஓங்கிக் குரல் கொடுப்பவர் தங்கபாலு. அவர் வெளிப்படையாக மீடியாவிடமும் இளங்கோவனை குற்றம் சாட்டிப் பேசினார்.  “இளங்கோவனா அனைவரையும் அரவணைத்துச் செல்வதில்லை.  மூத்த தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல்கூட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.  தேச துரோக வழக்கில் கைதான ஒரு பாடகரை ஆதரித்துப் பேசுகிறார். கட்சிக்கு ஒழுக்கமான, நேர்மையான தலைவர் தேவை” என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியையே நான் செய்து கொண்டிருக்கிறேன். பிற தலைவர்களை அரவணைத்துச் செல்லவில்லை என்ற புகார் ஏற்புடையதல்ல. நான் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் யாரும் வருவதில்லை என்பதே உண்மை” என்றார்.

மேலும், “கட்சிக்கு ஒழுக்கமான, நேர்மையான தலைவர் தேவை என தங்கபாலு கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், தங்கபாலு எவ்வளவு ஒழுக்கமானவர், நேர்மையானவர் என்பது எனக்குத் தெரியும்.

அவர் நேர்மையைப் பற்றி பேசத் தேவையில்லை. எனது சொத்து நிலவரம் என்னவென்பதை வெளிப்படையாக தெரிவிக்க நான் தயாராக இருக்கிறேன். அதேபோல், தங்கபாலுவும் தனது சொத்து விவரங்களைத் தெரிவிக்கத் தயாராக இருக்கிறாரா?” என சவால் விட்டார்.

சமீப நாட்களாக அமைதியாக இருந்த தங்கபாலு, இப்போது ஆவேசத்துடன் இளங்கோவனுக்கு எதிராக கொடி பிடிப்பது ஏன்?

காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். பல்வேறு அணியைச்சேர்ந்தவர்களையும் விசாரித்தபோது, எவருக்குமே தங்கபாலு மீது நல்ல எண்ணம் இல்லை என்பது புரிந்தது. இன்று தங்கபாலுவுடன் சேர்ந்து டில்லிக்கு படையெடுத்திருப்பவர்களின் ஆதரவாளர்கள்கூட, “தங்கபாலுவை தலைவரா போட்டா  கட்சி காலி” என்கிறார்கள்.

நாம் விசாரித்த வரையில் பலரும் சொல்வது இதுதான்:

“தங்கபாலு தேர்தல் சமயத்தில் செய்த தில்லுமுல்லுகளை  இன்னும் காங்கிரஸ்காரர்கள் மறக்கவில்லை.   சென்ற சட்டசபை தேர்தலில் 63 இடங்களை பெற்று அதனை தனக்கு பெட்டி தூக்கும் நபர்களுக்கு கொடுத்தார். , தனது மனைவி போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் பிரமான பத்திரத்தில் தில்லுமுல்லு செய்தார். , அன்றைய மற்றும் இன்றைக்கும் தென் சென்னை மாவட்ட தலைவராக இருக்கும் கராத்தே தியாகராஜன் செய்த ஆர்பாட்டத்தில் வீட்டை விட்டு வெளிய வராமல் , கட்சிக்கு மாபெரும் அவமானத்தை தேடி தந்தவர் தங்கபாலு.

தற்பொழுது தேர்தல் நெருங்குவதால் , எங்கே தாங்கள் அடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் டெல்லியில் தன்னுடைய “வேலையை” காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல.. இவர் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது, கட்சிக்கு உழைக்காதவர்கள், திறமை இல்லாதவர்களாக இருந்தாலும் தனது ஆதரவாளர்கள் என்பதாலேயே  விழுப்புரம் முதல் கிருஷ்ணகிரி வரை மாவட்ட தலைவராக நியமித்தார்.

தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுகிறார் தங்கபாலு. ஆனால் இளங்கோவன் சொல்வது போல திருட்டு ரயிலில் சென்னைக்கு வந்து இன்ற கோடி கோடியாய் சம்பாதித்திருக்கும் இவர் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசக்கூடாது.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக சொல்லி ஏமாற்றினார் என்ற புகார் இவர் மீது உண்டு. வழக்கும் பதவு செய்யப்பட்டது” என்று குமுறுகிறார்கள் கட்சிக்காரர்கள்.

 

அமெரிக்கை நாராயணன்
அமெரிக்கை நாராயணன்

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி பிரமுகரான அமெரிக்கை நாராயணனிடம் பேசினோம்.

“நான் கடைக்கோடி தொண்டனுடன் தினமும் பேசுகிறேன்.  நானும் கடைக்கோடி தொண்டனி்ன் உருவகம்” என்று ஆரம்பித்தவர், “மனிதவளம் உள்ள கட்சி காங்கிரஸ். நல்லவர்கள் மற்ற கட்சிகளைவிட அதிகம் உள்ள கட்சி.

எந்த கட்சியாக இருந்தாலும் அதில், பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள். அனைவரும் கட்சிக்குத் தேவை.   ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி கட்சிக்கு தேவை.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.   2006ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தங்கபாலுவின் செயல்பாடு சரியில்லை என்பதால் குரல் கொடுத்தேன். உடனே என்னை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார். ஆனால் அவர் உட்பட யாரையும் கட்சியைவிட்டு போகவேண்டும் என்று சொல்லமாட்டேன்.

இளங்கோவன் அனைவரையும் அரவணைத்து செயல்படுவதில்லை என்பது தவறு. அனைவருடனும் இணைந்து செயல்படுகிறார் என்பதே உண்மை. அவரை நான் பாராட்டுகிறேன்.

அதே நேரம் அவர்  சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.  வார்த்தைகளை மென்மைக்க வேண்டும். ஆனால் அவர் உள் நோக்கத்துடன் பேசவில்லை.

இளங்கோவன், சிகம்பரம், தங்கபாலு எல்லோருக்கும் நான் சொல்வது இதுதான். அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். காங்கிரஸ் எழுச்சி பெறும் நேரம் இது!” என்றார் அமெரிக்கை நாராயணன்.