1kuvakam

மார் நிறைய முடி வளர்ந்த பின்னும்

மல்லிகை மீதான மோகமும்

புடவை மீதான காதலும்

தோடும், வளையலுமாய்

நாங்கள்

இரண்டுமற்றவர்கள்

 

உடலெங்கும் ஆணாய்

மனமெங்கும் பெண்ணாய்

ரௌத்திரம் பொங்கும் அன்போடு

இயங்குகிறது எமது உலகம்

 

எமது உரிமைக்காய் கதறும்

குரல்வளைகள் மீது

உங்கள் எகத்தாள செருப்புகள் அழுந்துகிறது

 

எமது கண்ணீரைத் துடைக்கும்

கைகள் மீது

உங்கள் கேலி எச்சில் தெறிக்கிறது.

 

உங்கள் கேள்வி

எமது யோனி குறித்தே அமைகின்றன .

உங்கள் விசாரணை

விரசம் தோய்ந்தே இருக்கின்றன

 

எமது உலகின் இருட்டு

உங்களின் வெளிச்சம் பழகிய கண்களுக்கு

பல்லாண்டுகளாய் புரியவில்லை.

 

மெல்லிய திரையாய் கண் மறைக்கும்

அவமானம் எனும் இருட்டு

இங்குமின்றி அங்குமின்றி

அப்புறப்படுத்தும் பயம் எனும் இருட்டு

குத்தீட்டி சொற்களால்

மனதில் ஏற்படும் வலி எனும் இருட்டு

 

என்றும் எமது நாட்கள்

இருட்டாகவே விடிகின்றன.

இருட்டு உலகில்

எமது அழுகைச் சத்தம்

கூத்தாண்டவருக்கும் கேட்காதோ என

பலமாய் தட்டிக் கொண்டே இருக்கிறோம்

எமது கைகளை..!

 

– பிரகாஷ் சம்பத்குமார்