ஒரு பழரசம் அருந்தும் சுகமாய்
என்னை
உன்னுள்
உறிஞ்சுகிறாய்..
ஓடிய மானை வீழ்த்தி
மூக்கினால் முகர்ந்து
நகங்களால் குதறி
நாக்கினால் சுவைக்கும் மிருகமாய்
என்னை உண்கிறாய்
உண்ண உண்ண
சுவையின் மிகுதியில் திளைக்கிறாய்
என்ன சுவை நான் என
எனக்கே நீ உரைக்கிறாய்
கைவிரல்கள் அருமை
என அதையெல்லாம் உடைக்கிறாய்
கொஞ்சம் தாகம் என
வழியும் குருதி குடிக்கிறாய்…
உண்ட களைப்பில்
உறங்கும் உன்னை பார்த்தபடி
மீண்டும் வளர்கிறேன் நான்.
நாளையும் உனக்கு இரையாகும்
இன்பம் பெறுவதற்காய் அல்ல..
நாளையும் என் சுவை குறித்து
எனக்கு நீ உரைக்கும்
அந்த ஒரு கணத்திற்காய்…!
– பிரகாஷ் சம்பத்குமார்