wedding

பெரும்பாலும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது ஆண்கள்.  ஆனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்தே தீர்ப்பது. அல்லது வேலைக்குப் போகாமல் குடிக்க பணம் கேட்டு மனைவியை துன்புறுத்துவது…

குடும்ப பாரம் முழுவதையும் சுமப்பதோடு, குடிகாரன் மனைவி என்ற அவப்பெயரையும்  சேர்த்தே சுமக்க வேண்டிய அவல நிலை பெண்களுக்கு!

ஆனால் பொறுத்தது போதும் என்று பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள்.

தஞ்சை பகுதியில் ஒரு குடும்பத்தலைவர். குடிப்பதே தொழிலாக வைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். மனைவி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல டாஸ்மாக் மதுக்கடைக்கு கிளம்பியிருக்கிறார் கணவர். பின்னாலேயே சென்ற மனைவி, கணவரோடு சேர்த்து மதுக்கடைக்குள் நுழைந்துவிட்டார்.

“நீ குடித்தால் எனக்கும் வாங்கு.. சேர்ந்தே குடிப்போம்” என்று மனைவி சொல்ல.. அங்கிருந்த குடிகார ஆண்கள் அதிர.. (என்னதான் குடித்தாலும் ஆண்கள்தானே..) கணவர் எகிற.. ஒரே ரகளை.

விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றது. அங்கு, “இனி நான் குடிக்க மாட்டேன்” என்று எழுதிக்கொடுத்தார் அந்த குடும்பத்தலைவர். மனைவி முகத்தில் திருப்தி.

இதே போல ஒரு சம்பவம். நடந்தது வடஇந்தியாவில்.

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் சிறு கிராமம். திருமண நிகழ்வு ஒன்றுக்காக ஊரே திரண்டிருக்கிறது.

திருமண நேரம் நெருங்குகிறது. மண மேடையில் மகிழ்ச்சியும் வெட்கமுமாய் அமர்ந்திருக்கிறார் மணமகள். இதோ.. மணமகன் வருகிறார.. அய்யோ.. தள்ளாடியவாரே!

ஆமாம்.. மூக்கு முட்ட குடித்திருக்கிறார்.

மணப்பெண் இதைப் பார்த்தார். அதுவரை இருந்த மகிழ்ச்சி பறந்து போனது.  ஆவேசமாய் எழுந்தவர், மணமகனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

“குடிகாரனான உன்னை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த முடியாது” என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டார்.

தெற்கிலும் வடக்கிலும் குடிக்கு எதிராக பெண்கள் எழுச்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சபாஷ் பெண்களே!