அப்துல் கலாம் பெயரில் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சிக்கு ராமேசுவரத்திலுள்ள கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியைத்துவங்கிய கலாமின் ஆலோசகர் வி. பொன்ராஜ் இதுவரை மவுனம் காத்து வருகிறார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்தவர் வி.பொன்ராஜ். இவர் சமீபத்தில் அப்துல்கலாம் பெயரில் “அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கினார். பச்சை, வெள்ளை, ஊதா நடுவில் கலாமின் உருவம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த கட்சி குறித்து பொன்ராஜ், “”தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. தரமான கல்வி, மருத்துவம் இல்லாத சூழல் நிலவுகிறது. எட்டு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள்.
எனவே, ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்காக மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு நான் வந்திருக்கிறேன்.
டாக்டர் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க,… வளமான தமிழகத்தை உருவாக்க… இளைஞர்கள் தலைவர்களாக உருவாக்க…. கட்சி ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையே, “அப்துல்கலாம் புகைப்படத்தை தனது கட்சி தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்புகிறது. ஆகவேதான் பொன்ராஜ் மூலமாக கலாம் பெயரில் கட்சி ஆரம்பிக்க வைத்து, அவருக்கு ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கி கலாம் படத்தை பயன்படுத்திக்கொள்ள பாஜக நினைக்கிறது” என்று ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தது. ஏற்கெனவே பிரதமர் நரேந்திரமோடியை பொன்ராஜ் சந்தித்திருப்பதும் இப்படி ஒரு பேச்சு எழ காரணமாக அமைந்தது.
ஆனால், பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, “பொன்ராஜ் கட்சி துவங்கியதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” என்றனர்.
இதற்கிடையே அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி துவங்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. ராமேசுவரத்தில் உள்ள கலாமின் மூத்த சகோதர் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயர், “”எனது சகோதர் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் . அவரது பெயரில் கட்சி தொடங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது. கலாம் எப்போதும் அரசியலை விரும்பியது கிடையாது. கலாமின் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் இப்படி அவர் பெயரில் கட்சி துவங்குவதில் உடன்பாடில்லை” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து பொன்ராஜின் கருத்தை அறிய பலமுறை அவரது அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு குறுஞ்செய்தி அனுப்பினோம். அதற்கும் இப்போது வரை பதில் இல்லை. நினைவூட்ட மீண்டும் குறுஞ்செய்திகள் அனுப்பியபோதும், எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை.
அவரது மவுனத்தைக் கலைத்து பேசினால், அவரது கருத்தை பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.