டில்லி
இந்த மாதம் 14 ஆம் தேதி கர்தாபூர் ஆன்மிக பாதை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா வாகா எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலமும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலமும் அருகருகே அமைந்துள்ளன. இந்த இரு நாடுகளின் எல்லையில் சீக்கியர்கள் புனித தலமான கர்தாப்பூர் அமைந்துள்ளது. இங்குள்ள குருத்வாரா இரு நாட்டின் எல்லையில் அமைந்து இரண்டாக பிரிந்துள்ளது. இங்கு ஏராளமான சீக்கியர்களும் இந்துக்களும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஆகவே இங்கு ஒரு ஆன்மிக பாதை அமைத்து அந்த குருத்வாராக்களை இணைக்க முடிவு செய்ய்பட்டது. கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த பாதைக்கான அடிக்கல்லை நாட்டினார். அதே மாதம் 28 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டினார்.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள போர் அபாயத்தால் இந்த பணிகள் இரு பக்கத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்த அரசு கர்தாப்பூர் ஆன்மிக பாதை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தை வரும் 14 அம் தேதி வாகா எல்லையில் இந்திய பகுதியில் நடைபெற உள்ளது.” என தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பாதை இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கானதாகும். எனவே இது குறித்து பேச நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளை அனுப்ப உள்ளோம்” என தெரிவித்துள்ளது.