dolphin
கரை ஒதுங்கிய குட்டி டால்பினை கொன்ற செல்பி பிரியர்கள்

ப்வேநொஸ் ஏர்ஸ்:
மக்களின் செல்பி மோகத்தால் கடலில் இருந்து கரை ஒதுங்கிய குட்டி டால்பின் ஒன்று பரிதாபமாக உயிரை விட்டுள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் சாந்தா தெரெசிதா கடற்கரை ரிசார்ட் பகுதியில் குட்டி டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. அதை ஒருவர் தூக்கிக் கொண்டு கரைக்கு கொண்டு வந்தார். அந்த குட்டி டால்பினை பார்க்க கடற்கரையில் குளித்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஆளாளுக்கு டால்பினுடன் செல்போன்களில் செல்பி எடுக்கத் தொடங்கினர். இதனால் நீண்ட நேரம் தண்ணீர் இல்லாமல் இருந்ததாலும், வெப்பம் காரணமாகவும் அந்த டால்பின் பரிதாபமாக இறந்துவிட்டது.
அது இறந்த பின்னும் தரையில் கிடந்த டால்பினுடன் செல்பி எடுக்க கூட்டம் அலைமோதியது. இறந்த டால்பின் ‘லா பிளாட்டா’ என்ற அறிய வகையை சேர்ந்தது. அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே கடற்கரை பகுதியில் மட்டுமே காணப்படும் இந்த டால்பின்கள், தற்போது 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘மற்ற டால்பின்களை போல் இந்த வகை டால்பின்களால் அதிக நேரம் தண்ணீர் இல்லாமல் வெளியில் இருக்க முடியாது. கரையில் ஒதுங்கினால் உடனடியாக அதை மீண்டும் கடலுக்குள் விட்டுவிட வேண்டும். இதன் தோல் பகுதி தண்ணீரில் இருக்கும் அளவை விட வெளியில் கூடுதல் வெப்பமாகிவிடும்’’என வன உயிரின அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.