தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லாவிட்டால் எப்போதும் மாற்றம் இருக்காது என்று மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார்.
மக்கள் நல கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி இரண்டாம் கட்ட பிரசார பயணம் கோவையில் தொடங்கியது.
இதில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
மக்கள் நலக் கூட்டணியில் இருப்பவர்கள் உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால், எண்ணங்களால் ஒன்றுபட்டு இருக்கிறோம். கடந்த அறுபது ஆண்டு கால தமிழக வரலாற்றில் இப்படி ஒரு இயல்பான கூட்டணி அமைந்தது கிடையாது. எங்களைப் பார்த்து பயந்து போய் சிலர், எங்களது ஒற்றுமை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஊழல் என்ற சதுப்பு நிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை இப்போது இல்லாவிட்டால் பிறகு எப்போது மீட்பது? எங்களை விட்டால் வேறு யார் மீட்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்காவிட்டால் மாணவர்களின் சிந்தனை வன்முறை பாதைக்குச் சென்றுவிடும்.
மதுரையில் மக்கள் நலக் கூட்டணியின் பொதுக் கூட்டத்துக்கு 25 ஆயிரம் வாகனங்களும், 7 லட்சம் தொண்டர்களும் திரண்டடடதைப் பார்த்து கலக்கமடைந்த சில கட்சிகள், , கோடிக்கணக்கில் செலவிட்டு நடுநிலையாளர்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
கோவைக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம், வட்டச் சாலை, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதாக சொன்னவர்களின் வாக்குறுதிகள் என்னவானது என்று தெரியவில்லை. மாறி, மாறி ஆட்சி செய்யும் இரு கட்சிகளாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாது என்று தெரிந்து கொண்ட 12 லட்சம் அரசு ஊழியர்களும் எங்களை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுவும், ஊழலும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. மதுபான ஆலைகள் நடத்தும் இரு கட்சிகளாலும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது. டாஸ்மாக்கிற்கு முடிவு கட்டவும், சகாயம் போன்ற நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும், நேர்மையான முறையில் ஆட்சி நடத்தவும் மக்கள் நலக் கூட்டணியை பரிசோதனை அடிப்படையில் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். இளைஞர்கள், நடுநிலையாளர்களின் கவனம் எங்கள் மீது திரும்பியிருப்பதால், தமிழகத்தில் நிச்சயம் மௌனப் புரட்சி நடக்கும்”
- இவ்வாறு வைகோ பேசினார்.