சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வரும் சட்டசபை தேர்தலில் திமுக- காங். கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் – தேமுதிக கூட்டணி ஏற்படலாம் என்கிற நிலைமை உருவாகி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி நடக்கவிருக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து இறுதி முடிவை அக் கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.
இதற்கிடையே இன்று சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது.
வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுகவும் அங்கம் வகித்தது. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுடனான தனது உறவை முறித்துக் கொண்ட தி.மு.க., மத்திய அரசில் இருந்தும் விலகியது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. தற்போது இரு கட்சிகளிடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறது.
இன்றைய குலாம் – கருணாநிதி சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங். கமிட்டி தலைவர் இளங்கோவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.