தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரிலேயே தனது உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “தி.மு.கவினர், ம.தி.மு.கவினரை தாக்குகிறார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நேற்று முன் தினம் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று மறுமலர்ச்சி திமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன், அக்கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு 5 கோடியும் மாவட்டச் செயலாளர்களுக்கு 3 கோடியும் திமுகவினர் கொடுத்து, தேமுதிக தலைமைக்கு எதிராக அறிக்கைகள் விடவும், அதன்மூலம் அக்கட்சியை முடக்கவும் ஏற்பாடு செய்து இருப்பதை தக்க ஆதாரத்தோடு விவரித்தேன்.குறிப்பாக, நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் முகமது அலி என்பவருக்கு 3 கோடி ரூபாயும், கொண்டு வந்து சேர்ப்பவருக்கு 50 இலட்சம் ரூபாயும் கொடுக்க திமுக முனைந்ததைக் குறிப்பிட்டுத் திமுகழகத்தின் மீது குற்றம் சாட்டினேன்.
சேலத்தில் திமுக மேடையில் பேசிய நாகை நாகராஜன் என்ற பேச்சாளர் கலைஞர் கருணாநிதியை இறைத்தூதர் என்று முஸ்லிம் இன மக்கள் கருதுவதாகக் கூறிய அடாத செயல் கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் இருதயத்தில் நெருப்பை அள்ளிப் போட்டு இருக்கின்றது; அதற்குக் கலைஞர் கருணாநிதி உடனடியாக மன்னிப்புக் கேட்காவிட்டால், அவரை எதிர்த்து அறப்போராட்டம் நடத்துவதாக இசுலாமிய அமைப்புகள் தெரிவித்ததையும் நான் குறிப்பிட்டேன்.
அத்துடன் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில், கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டார்; பெரும்பணம் மு.க.ஸ்டாலினுக்குப் போய்ச் சேர்ந்தது; இந்த ஊழலில் முக்கியப் புள்ளியான சாகித் பல்வா, மு.க.ஸ்டாலினை, அவரது வீட்டில் நான்கு முறை சந்தித்தார்; இதன்பின்னர் பெரம்பலூர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்தார்; அதற்குப்பின் பல ரகசியங்கள் உள்ளன என்றும் நான் குற்றம் சாட்டினேன்.
ஊழல் பணத்திற்காக ஒரு கட்சிக்குத் துரோகம் செய்வது இன்னொரு கட்சிக்குப் புரோக்கராக மாறுவது மிகவும் இழிவான செயல்; மிகக் கேவலமான வேலை; உலகத்தின் புராதனமான தொழில் இதை விட மேலானது என்று கூறினேன். இதன்பின், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாதஸ்வரக் கலையும் தெரியும்; அது உலகின் தொன்மையான தமிழ் இசையின் கருவிதானே என்று கூறியது, அவரது சாதியைக் குறித்து நான் பழித்ததாகக் கருதுவதற்கு இடம் கொடுத்ததை எண்ணி, இது என் வாழ்நாளில் செய்த குற்றம்; அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்; நான் சாதி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை கலைஞர் அவர்களே நன்கு அறிவார்கள். தாயுள்ளத்தோடு அண்ணன் கலைஞர் அவர்கள் என் விளக்கத்தை ஏற்க வேண்டுகிறேன் எனும் அறிக்கையை, இரவு ஏழு மணிக்கே தந்து விட்டேன்.
ஆனாலும், இந்த நிமிடம் வரை என் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகக் கலைஞர் கூறாதது அவரது தனிப்பட்ட உரிமை. என் உருவ பொம்மைகள் கொளுத்தப்படுவதாலும், என் படங்களைச் செருப்பால் அடித்துக் காலில் மிதிப்பதாலும், அண்ணன் கலைஞர் அவர்கள் புளகாங்கிதம் அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில், தலைமை பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப, எனது உருவ பொம்மை எரிக்கப்பட்டது; பல இடங்களில் பாடையாகத் தூக்கிச் சென்று சுடுகாட்டில் எரிப்பது போல் எரித்தார்கள். என் படத்தைச் செருப்பாலும், விளக்குமாற்றாலும் அடித்ததோடு, காலில் போட்டு மிதித்து எரித்தார்கள்.
முதல் நாள் கலந்து கொள்ளாதவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்ததால், மறுநாள், அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஒன்றிய நகரங்களிலும், நேற்றும் எனது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் பலர் விருப்பம் இல்லாவிடினும் தலைமையின் கட்டளையால் இதில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதையும் நான் அறிவேன்.
என் ஊருக்கு அருகாமையில் உள்ள திருவேங்கடத்தில், பேரூராட்சி மன்றத்தை மதிமுக வென்று நிர்வாகத்தில் இருக்கிறது. அங்கும் திமுகவினர் இந்த எரிப்பு வேலையில் ஈடுபட இருப்பதை அறிந்து நான் அங்குள்ள கழகத் தோழர்கள் எந்தவித எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று கூறியதோடு, அனைத்து மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுக்கும் தொடர்பு கொண்டு, ‘நமக்கு ஆத்திரமூட்டுவதற்காகவே திமுக இந்த வேலையைச் செய்கிறது; அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மு.க.ஸ்டாலின் இந்த வேலையில் ஈடுபட்டு இருக்கின்றார்; எனவே நமது தோழர்கள் ஆத்திரப்பட வேண்டாம்’ என்று கூறி அமைதிப்படுத்தினேன்.
என்னுடைய அன்புத்தாயார் மாரியம்மாள் இதையெல்லாம் பார்க்காமல் இறந்து போனதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அவர்கள் இந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டிருந்தால், அந்த அதிர்ச்சியிலேயே உயிர் விட்டிருப்பார்.
கடந்த இரண்டு நாட்களாகப் பலஇடங்களில் மதிமுகவின் வீடுகள் மீது திமுகவினர் கல்வீச்சு நடத்துகின்றனர் என்ற செய்தி அறிந்து கழகக் கண்மணிகள் மிகவும் கொதித்துப் போயிருக்கின்றார்கள்.
நேற்று முன்தினம் 6 ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு நான் அறிக்கை கொடுத்ததற்கு இரண்டு மணி நேரத்திற்குப் பின் ஈரோடு மாநகரில் உள்ள மறுமலர்ச்சி திமுகழகத்தின் மாவட்டக் கழக அலுவலகமான அண்ணா அறிவகத்தின் மீது திமுகவினர் கல்வீசித் தாக்கி இருக்கின்றார்கள்.
நேற்று ஏப்ரல் 7 ஆம் தேதி நெய்வேலியில் என் உருவ பொம்மையை எரித்த திமுகவினர், அங்கிருந்து எங்கள் கழகத்தின் முன்னணித் தோழர் ஒருவரது இல்லத்திற்குச் சென்று, வெளிக்கதவைத் திறந்து, கதவு ஜன்னல்கள் மீது கல்லால் அடித்திருக்கின்றனர். அப்போது வீட்டில் அவரது துணைவியார் மட்டும் தனியாக இருந்திருக்கின்றார். இதன்பின் வீட்டு வாசலில் திமுக கொடியை ஊன்றிவிட்டுத் திமுகவினர் சென்று விட்டனர்.
என் உருவ பொம்மையைக் கொளுத்துவது குறித்து நான் ஆத்திரப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. நான் இறந்ததற்குப் பிறகு என் உடலை ஒன்று மண்ணில் புதைப்பார்கள்; அல்லது சுடுகாட்டுச் சிதையில் எரிப்பார்கள். அதை நான் உணரவா போகிறேன்? இல்லை. ஏன் என்னையே திமுகவினர் உயிரோடு எரிக்க முனைந்தாலும், நான் அதனை எதிர்க்கப் போவது இல்லை. ஆனால், நான் எனது உயிருக்கும் மேலாக நேசிக்கின்ற எனது கழகக் கண்மணிகள் மீது துரும்பு பட்டாலும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.
திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை: ‘தொடர்ந்து வினையை விதைக்காதீர்கள். இல்லையேல், வினையைத்தான் மொத்தமாக அறுவடை செய்வீர்கள்’ என எச்சரிக்கின்றேன்” இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.