vaiko karunanidhi

 

விக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ, அதே விழாவுக்கு கருணாநிதயும் கலந்துகொள்ள வர..  விடுவிடுவென கிளம்பி வெளியேறியிருக்கிறார்.

இப்போது தமிழக அரசியலில் சூடாக விவாதிக்கப்படுவது, இந்த டாபிக்தான்.

“கருணாநிதியை வைகோ புறக்கணித்திருக்கக்கூடாது” என்பவர்கள், “ என்னதான் இருந்தாலும் கருணாநிதி மூத்த தலைவர். எதிரணியில் இருந்த போதும் தனது வீட்டு திருமணத்துக்கு மகன் ஸ்டாலின் மூலம்  அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது இதே வைகோவும் ஸ்டாலினை முகமன் கூறி வரவேற்றாரே… திருமணத்துக்கும் சென்று வாழ்த்திப் பேசினாரே!” சரியா” என்கிறார்கள்.

வைகோ ஆதரவாளர்களோ, “கருணாநதியை தன் உயிருக்கும் மேலாக மதித்தவர் வைகோ” என்று பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டுபவர்கள், “அதே கருணாநிதிதான், தனது மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ வந்துவிடுவாரோ என்று பொய்யான கொலைப்பழி சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார்.  அது மட்டுமல்ல.. இன்றுவரை வைகோ மீதான கரிப்பு கருணாநிதிக்கு குறையவே இல்லை. ம.தி.மு.க.வில் இருந்து பலரையும் தன் கட்சிக்கு இழுக்கும் வேலையை செய்கிறார். இப்படிப்பட்டவர் முகத்தில் ஏன் விழிக்க வேண்டும் என்றுதான் வைகோ அந்த சந்திப்பை தவிர்த்தார்” என்கிறார்கள்.

ஆனால் கருணாநிதி ஆதரவாளர்கள், “இதே வைகோ கடந்த 2003ம் ஆண்டில், “என் வாழ்நாளில் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். அரசியலில் எதுவும் நேரலாம்.  ஆனால் என் வாழ்நாளில் இனி கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது”என்றார்.

இதே போன்ற ஒரு சூழல் கடந்த வருடம் அக்டோபர் இறுதியில் எற்பட்டது. அப்போது நடந்த வைகோ – ஸ்டாலின் சந்திப்பு பரபரப்பான விசயமாக அரசியல் தளத்தில் பேசப்பட்டது. அப்போது வைகோ, “ ஸ்டாலினை சந்தித்தது அரசியல் நாகரீகம் கருதியே. அதே நாகரீகத்துடன் தயாளு அம்மாள் கையால் சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் அவர்கள் உடல் நிலை பற்றியும் விசாரித்தேன்.

எனது தம்பி ரவிச்சந்திரன் திருமணத்துக்கு வந்த கலைஞர் கவர்னர் உரையை விட தம்பி ரவிச்சந்திரன் திருமணம் தான் முக்கியம் என்பதால் இந்த திருமணத்திற்கு வந்தேன் என்று கூறியதையும் நினைத்து பார்க்கிறேன் ….

தற்போது ஊடகங்கள் கூட்டணி பிரச்சனையை பெரிது படுத்துவதால் கூட்டணி பற்றி விளக்கம் அளிக்கிறேன். தற்போது கூட்டணி வைக்கும் எண்ணம் துளி கூட இல்லை என்றார்.

குறிப்பாக, வைகோ, ‘‘அரசியல், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சந்தித்து பேசினோம்‘‘ என்று முழங்கினார்.

அது போல இப்போதும் சொல்லிவிடலாமே. ஒரே மேடையில் எதிரும் புதிருமான தலைவர்கள் இருவர் சந்திப்பது அத்தனை பெரிய குற்றமா? தமிழகத்தில் அரசியல் நாகரீகம் பற்றி அடிக்கடி பேசுபவர் வைகோதான்.அவரே இப்படி நடந்துகொள்ளலாமா?” என்று கருணாநிதியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

வைகோ ஆதரவாளர்களோ, “அரசியல் நாகரீகம் என்ற பெயரில் வைகோவும் ம.தி.மு.கவும் இழந்தது நிறைய. எதிரிதான் நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்பது போல, நமது குணத்தையும் எதிரிதான் தீர்மானிக்கிறான்.  இங்கே நாகரீமாக நடந்துகொள்வது  என்பது ஏமாளித்தனமாக எதிரிகளால் கணிக்கப்படுகிறது. ம.தி.மு.க.வின் எம்.பிக்களையே தங்களது கட்சி எம்பிக்கள் போல கணக்கு காட்டி மந்திரி பதவி வாங்கியவர்கள்தானே அவர்கள்! இது போல நிறைய சொல்லலாம்.

டில்லிக்கு சென்ற வைகோ, ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலை கட்டிப்பிடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அதே நேரம், ஊழல் என்றால் நினைவுக்கு வரக்கூடிய லாலு பிரசாத் யாதவையும் கட்டிப்பிடித்து குசலம் விசாரித்தார். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமா.. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வேட்பாளரான மோடியுன் வாஞ்சையுடன் பழகினார். அவை புகைப்படங்களாகவும் வந்தன. ஆனால் அவர் பதவியேற்பு அன்றே போராட்டம் நடத்த வேண்டிய நிலை.   மோடி – வைகோ  சந்திப்பு படங்களை வெளியிட்டு எதிர் தரப்பினர் கிண்டலடித்தார்கள்.

இதெல்லாம் போகட்டும்…  அந்த நிகழ்ச்சியில்  வைகோ வெளியேறாமல் மேடையிலேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கருணாநிதி பேசும்போது, “மேடையிலே இருக்கும் அன்புத்தம்பி வைகோ.. “ என்று ஆரம்பித்து, கண்கலங்க பேசுவார். வைகோவும் உணர்ச்சிவசப்பட்டு, பழைய பாசத்தைப் பொழிந்துவிடுவார். அப்படி நடக்காமல், துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்கிற நியதிக்கேற்ப விலகி வந்திருக்கிறார் வைகோ. அவர் இப்போதுதான் சரியான அரசியல் பாதைக்கு வந்திருக்கிறார். அவரை மனமார பாராட்டுகிறோம்.” என்கிறார்கள் வைகோ ஆதரவாளர்கள்.

“அரசியல் நாகரீகம் என்று பேசியதோடு, அதை செயலிலும் வெளிப்படுத்தியவர் வைகோ. மதுவிலக்கு கோரி நடைபயணம் சென்றபோதுகூட, வழியில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேர்கையில் நலம் விசாரித்தவர். அவரும் தற்போது தன் குணத்தை மாற்றிக்கொண்டாரோ” என்பதுதான் அரசியல்பார்வையாளர்களின் வருத்தம்.