திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பு பேசினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து தி.மு.க தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை தி.மு.க தலைமை எடுத்தது.
இதைத் தொடர்ந்து, திமுக தலைமையை தொடர்ந்து அழகிரி விமர்சித்து வந்தார். இதனை திமுகவும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் 24-ம் தேதி, கருணாநிதியை திடீரென மு.க.அழகிரி சந்தித்து பேசினார். தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு, தி.மு.க.வில் மட்டுமின்றி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனால், “தந்தை என்ற முறையில் அவரை சந்தித்தேன்” என்று அழகிரி விளக்கம் அளித்தார்.
தி.மு.க கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. இதனால், அழகிரி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக அப்போது கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, மு.க.அழகிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “சூரியனுக்கு சொந்தங்கள் நாங்கள், ஆதரிப்பீர் உதயசூரியன்” என்று பதிவு செய்தார். அழகிரியின் இந்த அதிரடி பிரச்சார முடிவு, திமுக தலைமையை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென இன்று (14-4.2016) கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். புத்தாண்டு வாழ்த்து பெற கருணாநிதியை சந்தித்ததாக மு.க.அழகிரி கூறியுள்ளார். ஆனாலும், தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இவர்களது சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.