நாட்டில் மதவாத சக்திகள் அதிகரிக்கையில், இயல்பாகவே சிறுபான்மையினரின் இருப்பு குறித்த அச்சம் ஏற்படும், அப்போதெல்லாம் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கவேண்டியது கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களது கடமையும் கூட. அதுவும் வெகுஜன மக்களிடையே பிரபலமாக அறியப்படுபவர்கள் இதைச்செய்வது மிகமுக்கியமான நிகழ்வு.
இதையொட்டிய செய்தியாகத்தான் அமீர்கான் சமீபத்தில், தன் மனைவி இந்நாட்டில் வாழ்வது குறித்து அச்சம் தெரிவித்திருப்பதை அவர் பொதுவெளியில் பகிர்ந்திருப்பதைக் கவனிக்கிறேன். இதே காலகட்டத்தில்தான் “விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை”, என்று பேசியவர் உலகநாயகன். விருதைத் தானே வைத்துக்கொள்வது, அல்லது விருதைத் திருப்பிக்கொடுப்பது என்பதையெல்லாம் தாண்டி, இதுபோன்ற செயல்களினூடே சிறுபான்மையினருக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதென்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். கமலஹாசன் அவ்வாறு செய்யவில்லை, சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கவும் இல்லை. ஆனால், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பவர்களை நோக்கி தன் கருத்தின் மூலமாக ஒருவித சலசலப்பை உண்டாக்குகிறார்.
ஆனால் அமீர்கான் எவ்வித குழப்பமும் இலாமல் தன் நிலைப்பாட்டினை பொதுமேடையில் முன் வைக்கிறார். உலக நாயகன் போல, போலி நாயகனாக இல்லாமல், உண்மை நாயகனாக அமீர்கானே திகழ்கிறார். அமீர்கான் பேச்சை ஊடகங்களும், மதவாத சக்திகளும், ’அமீர்கான் பாகிஸ்தான் செல்ல விருப்பப்படுவதாக’, திரித்துக் கூறுகிறார்கள். அதற்கான கண்டனங்களையும் சிறுபான்மையினரின் நலனில் அக்கறைகொண்டு நிற்கும் அமீர்கானுக்கு ஆதரவையும் தெரிவிக்கவேண்டியது நம்முடைய கடமை.