சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று அதிகாலை முதல் பெய்யும் கன மழையால் மீனம்பாக்கம் விமான நிலையத் தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் கொழும்பு, சிங்கப்பூர், துபாய், டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்கள் தாமதமாக வந்தன.
இந்த நிலையில், 150 பயணிகளுடன் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்க முடியாததால் மீண்டும் கொழும்பு நகருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் ஐந்து விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடியே இருந்தன. ஓடுபாதையில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டதை தொடர்ந்து அவை ஒவ்வொன்றாக தரை இறக்கப்பட்டன.
இதனால் இன்று மதியம் வரை 30 விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவதில் ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இது போல் ரெயில் தண்டவாளத்தில் நீர் தேங்கியதால் சென்னை கடற்கரை- தம்பரம், மற்றும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புறநகர் ரெயில்கள் தாமதமாக வந்து செல்கின்றன. சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதமாக வந்தன.