ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடிய அதிவேக ஜெட் விமானத்தை இயக்கப்போகும் உலகின் முதல் பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது ஆயிஷா அசிஸ்!
கடந்த வாரம் வணிக ரக விமானங்களை ஓட்டுவதற்கான பைலட் உரிமத்தை ஆயிஷா பெற்றார். தற்போது ஒலியை விட வேகமாகச் செல்லகூடிய மிக் – 29 என்ற போர் விமானத்தை இயக்கப் போகிறார்.
இந்த சாதனை நிகழ்த்தப்பட்டால் இது போன்ற கனரக போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் என்ற அந்தஸ்த்தை பெறுவார்.
இந்த மிக் – 29 ரக விமானத்தை ரஷ்ய விமான தளத்தில் இயக்கப்போகிறார்.
ஆயிஷாவுக்கு சிறு வயதில் இருந்தே, பறப்பதுதான் கனவு. விமானி ஆவதுதான் லட்சியம். தனது 16-ம் வயதிலேயே விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் இவர்.
“விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்தான் எனது ரோல் மாடல்” என்று கூறும் ஆயிஷா, போர் விமானங்களை இயக்கும் விமானி ஆவதுதான் தனக்கு விருப்பம் என்றும் சொல்கிறார்!
பறக்கும் பாவையை நாமும் வாழ்த்துவோமே!