ஐம்தாணடில் முடியாதது ஐந்தாண்டி செய்து முடிப்பதாக அன்புமணி, சீமான் சொல்வது நடக்குமா
சமீபகாலமாக சில அரசியல் தலைவர்கள், “ஐம்பதாண்டு திராவிட (தி.மு.க + அ.திமு.க) ஆட்சிகாலத்தில் செய்ய முடியாததை ஐந்தாண்டுகளிலேயே செய்வோம்” என்கிறார்கள். அதே போல, “அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு தேவைப்படும் திட்டங்களை ஐந்தே ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்” என்றும் சொல்லி வருகிறார்கள். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான்.
“ உங்கள் ஊர், உங்கள் அன்புமணி “ என்ற தலைப்பில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களிடம் கலந்துரையாடல் செய்து வரும் அன்புமணி, விழுப்புரத்தில் பேசும்போது, “தமிழகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டுவர எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தில் தொடரும் பிரச்னைகளுக்கு, விஞ்ஞான ரீதியில் ஆய்ந்து தீர்வுகாண முடியும். 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை மேற்கொள்ள முடியும்” என்றார்.
அதே போல, நாம் தமிழர் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சீமான், “அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகள். 50 ஆண்டுகளில் செய்யாததை அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிச்சயம் செய்வோம்” என்று பேசினார்.
முதல்வராக இருந்தபோது, அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “எதிர்க்கட்சிகள் தாங்கள் விரும்பியதை பேசலாம். அவர்கள் வெறும் கையை ஆட்டி ஆட்டி பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் கைகளில் ஆட்சி எனும் விளக்கை வைத்திருக்கிறோம். ஆகவே நாங்கள் கைகளை ஆட்டி பேச முடியாது” எனறார்.
உதாரணத்துக்குச் சொல்வது என்றால், மோடியை எடுத்துக்கொள்வோம். “ஆதார் அட்டை கூடாது” என்றார். இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் இல்லை என்கிறது அவரது மத்திய அரசு.
“வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு இந்தியனையும் லட்சாதிபதி ஆக்குவோம்” என்றார். இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.
ஆட்யில் இல்லாத போது சொல்வது என்பது வேறு. ஆட்சியில் இருக்கும்போதுதான் அதன் சிக்கல்கள், யதார்த்த நிலை புரியும்.
இதன் இன்னொரு கோணம்… தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மீது விமர்சனங்கள் உண்டு என்றாலும்,அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்ற கூற முடியாது.
குடிசை மாற்று வாரியம் உட்பட, கருணாநிதியின் சாதனைகள்று சிலவற்றை பட்டியல் இட முடியும். அதே போல ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பெறப்பட்ட காவிரி நீர் உரிமையும் முக்கியமான செயல்பாடு. (அது இன்னமும் பிரச்சினையில் இருந்தாலும், அரசிதழில் கொண்டுவந்தது சாதனையே.)
ஆக பொத்தாம் பொதுவாக, இந்த இரு கட்சிகளையும் எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட முடியாது.
இன்னொரு முக்கிய விசயம். நினைத்ததை நிறைவேற்ற அல்லது நிறைவேற்ற முயற்சி செய்ய.. நிர்வாகத்திறன்.. அனுபம் தேவை. அன்புமணியாவது, எம்.பி., மத்திய அமைச்சர் என்று பணியாற்றி இருக்கிறார்.
ஆனால் சீமான், எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ. ஆகவோ கூட இருந்ததில்லை. ஏன், பஞ்சாயத்து கவுன்சிலாரக்கூட இருந்ததில்லை.
இந்த நிலையில் ஐம்பதாண்டில் முடியாததை ஐந்தாண்டில் செய்து முடிப்போம் என்கிறார்.
சரி.. தேர்தல் காலம்.. இப்படித்தான் பேசுவார்கள் என்று சிரித்துவிட்டுப்போக வேண்டியதுதான்.