velmurugan
ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவது என்பது எட்டாக் கனியாகவே இன்னமும் நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதையே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென கல்வி கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருகின்றன.
2008-09-ல் ஐ.ஐ.டி. கல்விக் கட்டணம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு 80% அளவுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ90,000 என நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது ரூ90,000 என்பதை 200% அளவுக்கு அதாவது ரூ3 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது இந்த நாட்டின் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்கும் கொடுஞ்செயலாகும்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் இருந்த காலத்தில் ககோட்கர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது 2012-13ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு ஐஐடி கல்வி கட்டணத்தை ரூ2 லட்சத்துக்கு அதிகமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான பரிந்துரைகளை அளித்திருந்தது.
அந்த பரிந்துரைகள் அனைத்துமே இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வியை சிந்தித்துகூட பார்த்துவிடக் கூடாது என்கிற வகையில் இருந்தன. இப்படி கட்டணங்களை நிர்ணயிப்பதே மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் ஐஐடிக்கள் நிதி விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற ஒரு காரணமும் சொல்லப்பட்டது.
ஆனால் நிச்சயம் கடுமையான எதிர்ப்பு எழும் என்பதால் முந்தைய காங்கிரஸ் அரசு ககோட்கர் கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் 2015-ம் ஆண்டு பாஜக ஆட்சிக் காலத்தில் ஐஐடி இயக்குநர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுதான் ககோட்கர் கமிட்டியின் பரிந்துரைகளை விஞ்சும் வகையில் 200% அளவுக்கு கல்விக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது.
அத்துடன் புதியதாக நுழைவுத்தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தவும் இந்த குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
நாட்டின் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் இத்தகைய உயர் தொழில்நுட்ப கல்வி கிடைக்க செய்ய வேண்டியது ஒரு அரசின் அடிப்படை கடமை. இதைச் செய்யாமல் கல்வி கொள்ளையர்களைப் போல மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது.
இத்தகைய ஏழை எளிய மக்களின் உயர் தொழில்நுட்பக் கல்வியைப் பாழாக்குகிற வகையிலான கட்டண உயர்வு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; புதிய நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
இதுபோன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் பரவலாக பல்வேறு நகரங்களிலும் ஏற்படுத்துவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனைடவர்; அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை காவு வாங்கும் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டி கேட்டுக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.