ramadas
ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு பெருமளவில் குறைத் திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிப்பதுடன், சேமிக்கும் வழக்கத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
அஞ்சலக வைப்பீட்டுத் திட்டத்திற்கான வட்டி விகிதம் தான் மிக அதிக அளவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 8.4% ஆக இருந்த வட்டி விகிதம் 7.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.3% ஆக இருந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதமும், 9.2% ஆக இருந்த தங்க மகள் திட்டத்திற்கான வட்டி விகிதமும் இப்போது 8.6% ஆக குறைக்கப்பட்டுள்ளன. கிசான் விகாஸ் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 8.7 விழுக்காட்டிலிருந்து 7.8% ஆக குறைக்கப் பட்டிருக்கிறது. வங்கி வைப்பீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக 9 வகையான சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியை குறைத்திருப்பதாக அரசு கூறியுள்ளது.
வங்கி வைப்பீடுகளுக்கும், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் ஒரே வகையான வட்டி வழங்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே தவறானது. வங்கி வைப்பீடுகளில் பெரும்பாலானவை உபரி நிதியை முதலீடு செய்யும் நோக்கம் கொண்டவையாகும். ஆனால், சேமிப்புத் திட்டங்கள் அப்படிப் பட்டவை அல்ல. எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற திட்டங்களைவிட அதிக வட்டி கிடைக்கும் என்ற நோக்கத்திலும் தான் சிறு சேமிப்புத் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அதுமட்டுமின்றி, சிறுசேமிப்புத் திட்டங்களில் சமூகப் பாதுகாப்பு நோக்கமும் அடங்கியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது இவற்றையும் வங்கிகளில் வைப்பீடுகளுடன் ஒப்பிட்டு வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்திருப்பது சிறிதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு இதுவரை 9.3% வட்டி வழங்கப்பட்டு வந்தது. சேமிப்புத் திட்டங்களிலேயே இதற்குத் தான் அதிக வட்டி என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் தங்களுக்கு கிடைத்த ஓய்வுக்கால நிதி பலன்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இப்போது வட்டி விகிதம் 0.7% குறைக்கப்பட்டிருப்பதால், ரூ.10 லட்சத்தை பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்பவர்களுக்கு ரூ.1,43,460 ரூபாய் வட்டி இழப்பு ஏற்படும். அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் இதே அளவுக்கு முதலீடு செய்பவர்களுக்கு ரூ.2,66,435 இழப்பு ஏற்படும். சேமிப்புத் திட்டங்களில் கிடைக்கும் வட்டியைக் கொண்டே வாழ்க்கை நடத்தும் நிலையிலுள்ள பொதுமக்களை இது பாதிக்கும்.
பெண் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்காக என்ற அறிவிப்புடன் சுகன்ய சம்ருதி திட்டத்தை (தங்க மகள் திட்டம்) ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு 9.2% வட்டி வழங்கப்பட்டதால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் பெயரில் இத்திட்டத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், இப்போது வட்டி குறைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்கு போதிய நிதி கிடைக்காத நிலை ஏற்படும்.
நாட்டின் சிறந்த சேமிப்புத் திட்டம் என்று அறியப்பட்டது கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆகும். இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலீடு செய்த பணம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும். ஆனால், இப்போது இதற்காக 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள வட்டிக் குறைப்பால் இனி 13 ஆண்டுகள் கழித்து தான் முதலீடு இரட்டிப்பு ஆகும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு 10 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.1,83,731.50 வட்டி இழப்பு ஏற்படும் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் நிதியைத் தான் மத்திய அரசு அதன் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சேமிக்கும் வழக்கத்தைக் கைவிட்டால், அரசு அதன் தேவைகளுக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். பொதுவாக சிறு சேமிப்புக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசு வணிக நோக்குடன் செயல்படாமல் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும். 2015&ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 1.5% வட்டி விகிதத்தை குறைத்தது. அதனடிப்படையில் பொதுமக்கள் செய்யும் வைப்பீடுகள் மீதான வட்டியை 1.5% அளவுக்கு குறைத்த வணிக வங்கிகள், பொதுமக்களுக்கு வழங்கிய வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியை 0.45% மட்டுமே குறைத்தன. இவ்வாறாக மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் எடுக்கும் முடிவால் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’