வாசுதேவ மேனன் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம், “விண்ணைத் தாண்டி வருவாயா’. இதையடுத்து மீண்டும் இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் துவக்கப்பட்டது. சிம்பு ஹீரோவாக நடிக்க தமிழிலும், நடிகர் நாகார்ஜூனா மகன் அகில் நடிக்க தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.
படப்பிடிப்பின் போது, அகில், ஃபர்பெக்டாக ஒத்துழைத்தார். ஆனால் சிம்பு வழக்கம்போல வம்புதான்!
“ஒரு பாடல் காட்சியின் போது தெலுங்குக்காக அகில் நடனமாடி முடித்துவிட்டார். அடுத்து சிம்பு ஆட வேண்டும். ஆளைக்காணவில்லை. தேடிப்பார்த்தால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் ஓரத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியில் படுத்திருந்தார். தயங்கி தயங்கி எழுப்பினார்கள் உதவி இயக்குநர்கள். அவர் எழுந்திருப்பதாய் இல்லை.
இயக்குநர் கவுதம் மேனனுக்கு தகவல் போக, அவரே வந்து எழுப்பினார். அரைகுறையாக கண் விழித்த சிம்பு, “எனக்கு காலில் அடிபட்டிருக்கிறது.. ஆட முடியாது” என்று முணங்கினார்.
காலைப்பார்த்தால் காயம் ஏதும் இல்லை. குழப்பமும் அதிர்சியுமாக, கவுதம்மேனன், “சரி, டாக்டரை பார்க்கலாம்..” என்று எழச் சொல்ல.. அதற்கு சிம்புவிடமிருந்து பதிலே இல்லை… “ என்று ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் “அச்சம் என்பது மடமையடா” குழுவில் உள்ள சிலர்.
இதே போல ஏகப்பட்ட இம்சை கொடுத்துவிட்டார் சிம்பு. “சிம்பு நல்லா வரணும்” என்றெல்லாம் கவுதம் மேனன் பேட்டி கொடுத்து பார்த்தார். ஊஹூம்.. சிம்பு வழிக்கு வருவதாய் இல்லை. இதற்கிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் சிம்பு பற்றி வருத்தப்பட்டிருக்கிறார் கவுதம் மேனன். ரஹ்மான் மீது சிம்புக்கு மரியாதை உண்டு. ஆகவே ரஹ்மான்,” எனது இசையில் பாட வேண்டும் என்று சொல்லி சிம்புவை அழைத்து வாருங்கள்.. நான் அவருக்கு அட்வைஸ் செய்கிறேன்” என்று சொல்ல. அதற்கான முயற்சி நடந்திருக்கிறது.
அந்த நேரத்தில்தான் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிவி்ட்டார் சிம்பு.
இப்போது, “அச்சம் என்பது மடமையடா” படத்தின் தமிழ் வெர்சனில், சிம்பு நடிக்க வேண்டிய சில காட்சிகளும், பாடல்களும்தான் இருக்கின்றன. ஆனால் அவரை வைத்து இனி எடுக்க முடியுமா, எடுத்தாலும் ரிலீஸில் பிரச்சினை வருமா என்றெல்லம் குழம்பிப்போய்விட்டார் கவுதம் மேனன். ஏனென்றால் இது அவர் இயக்கும் படம் மட்டுமல்ல.. தயாரிப்பும் அவர்தான். ஏற்கெனவே சில,பல பிரச்சினைகளால் கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார் அவர்.
“ஆகவே “அச்சம் என்பது மடமையடா” படத்தின் தமிழ் வெர்சனை அப்படியே அந்தரத்தில் விட தீர்மானித்துவிட்டார். தெலுங்கு வெர்சன் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ள காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கவுதம். இந்த விஷயத்தை டி.ராஜேந்தரிடமும் வருத்தத்தோடு தெரிவித்துவிட்டார் கவுதம் மேனன்” என்கிறது விஷயம் அறிந்த வட்டாரம்.
“போலீஸ் கேஸ் என்று வந்தபோதெல்லாம் மகனுக்கு ஆதரவாக தெம்பாக பேசிவந்த டி.ராஜேந்தர், இதன் பிறகுதான் பதற ஆரம்பித்தார். மகனின் எதிர்காலமே போய்விடுமே என்ற பயத்தில்தான் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, வழக்கலிருந்து விடுபட யாகம் எல்லாம் செய்து வந்தார்” என்கிறார்கள்.
“சிம்பு நல்லா வரணும். வருவா..” என்றெல்லாம் அக்கறையுடன் பேட்டி கொடுத்த கவுதம் மேனனையே மனம் மாறும்படி செய்துவிட்டது பீப் பாடல் விவகாரம்.
“சிம்பு மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவரது திறமை மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு. பீப் பாடல் வெளியான போதே, “இனி திரையுலகினரால் சிம்பு ஓரம்கட்டப்படுவார்” என்று பேச்சு அடிபட்டது. அது ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் சிம்பு நலம் விரும்பிகள்.