சமூக ஆர்வலர் சந்திர பாரதி அவர்களின்  கட்டுரை:
 
0 b
 
டகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் தினமும் சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன.
எல்லா நிகழ்வுகளுக்கும் கருத்து கேட்கும் பழக்கமும் ஏர்பட்டு விட்டது. சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ மற்றொரு உட்கட்சியின் பிரச்சனையானாலும், நீதி மன்ற தீர்ப்பேயானாலும், விவரம் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, செய்தியின் ஆழத்தை உள்வாங்கியிருக்கிறார்களோ இல்லையோ (கேள்வி கேட்பவரும் சரி பதில் சொல்பவரும் சரி) தகவலை முந்தித் தரவும் முதலில் கருத்து தெரிவிக்கவும் ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு முன் வருகிறார்கள்.
ஊடகங்களுக்கு எளிமையாக சிக்குபவர்கள், ஊடக பலம் இல்லாத கட்சிகளின் தலைவர்கள் தான். ஊடக பலம் உள்ள தலைவர்கள் தங்கள் அறிக்கைகளைத் தவிர வேறு எதனையும் பிற ஊடகங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதில்லை. பேட்டிகள் அளிப்பதுமில்லை.
ஒரு பெரிய கட்சியின் தலைவரிடம் பேட்டி வேண்டுமென்றால் அவரது உதவியாளரிடம் கடிதம் கொடுத்து விட்டு மாதக் கணக்கில், ஏன் வருடக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு பெரிய கட்சியில் சாதாரண விவாதங்களில் பேசுவதற்கு கூட பிரதிநிதிகளை நியமிக்க கட்சி தலைமை அலுவலகத்தில் கடிதம் கொடுத்து விட்டு காத்திருக்க வேண்டும்.
பொதுவான நிலைமை இப்படி இருக்க, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செய்வது என்ன?
ஊடக பலமற்ற, ஆனால் ஊடக பலம் தேவையுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கேள்விகளை முன் வைத்து பதில்களைப் பெறுகின்றனர். மிக தர்மசங்கடமான கேள்விகளைக் கூட ஆழமறியாமல் வைத்து தர்மசங்கடங்களில் ஆழ்த்துகின்றனர்.
இதே ஊடக்வியலாளர்கள் கீழ் கண்டவற்றைச் செய்வார்களா?

  1. தமிழ் நாட்டின் இரண்டு பெரிய கட்சி தலைமைகளை பேட்டிக்கு அழைப்பார்களா, பேட்டி கொடுக்க இரண்டு தலைவர்களும் முன் வருவார்களா?
  2. அவர்களிடம் பொது வெளியில் அவர்கள் மீது வைக்கப்படும் ஆதாரமுள்ள, ஆதாரமற்ற கேள்விகளை முன் வைத்து பதில் பெறுவார்களா, உதாரணத்திற்கு, ஆளூம் கட்சி தலைமையிடம் (பேட்டி கொடுத்தால்) தவறு செய்த அமைச்சர்களை நீக்கிவிட்டு சில காலத்திற்கு பின் சேர்த்துக் கொள்வதன் காரணம் என்ன, இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன, தவறுகள் திருத்தப்பட்டதால் ஏற்றுக் கொண்டார்களா, செய்த தவறுகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை, சமரசத்திற்கு காரணம் என்ன, கப்பம் கட்டியதில் இருந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதால் மீண்டும் மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட்டார்களா எனக் கேட்பார்காளா?
  3. ஆளும் தலைமை (பேட்டியளித்தால்) சமீபத்தில் வெகுஜன ஊடகங்களில் கிசுகிசுக்கபட்டபடி, சில மூத்த அமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக வந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி கேட்பார்களா, சில ஆயிரம் கோடி பணம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வந்த செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி கேட்பார்களா?
  4. சரி, ஆளும் தலைமை பேட்டியளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மூத்த அமைச்சர்களிடம் இதே கேள்விகளை முன் வைக்க முன் வருவார்களா, ஊடக நெறியாள நண்பர்கள் ?
  5. ஆளும் தலைமையிடமோ, விவாதங்களில் பங்கு பெறும் அவரது கட்சி பிரதிநிதிகளிடமோ, அவர்கள் தேர்தலில் வென்றால் அடுத்த ஐந்தாண்டிற்கு யார் முதல்வராக தொடர்ந்து இருப்பார் எனக் கேட்க முடியுமா? ஆளும் தலைமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மாற்று முதல்வர் யாரென்று கேட்கமுடியுமா? மக்கள் ஆளும்தலைமையை நம்பித்தானே வாக்களிக்கிறார்கள் அவர் முதல்வர் இல்லையென்றாம் யாரென்று அடையாளம் காட்டச் சொல்ல துணிவு உண்டா? மக்களின் நம்பிக்கை பொய்க்கக் கூடாதல்லவா…நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதால் தான் இந்த கேள்வி, மட்டுமின்றி, ஆலும் தலைமை முதல்வராய் இல்லாமல் மாற்று முதல்வர் இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் எந்த நலத் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் நடை பெறவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே….
  6. எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், 110 அறிக்கைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றி பட்டியிலிட்டு கேள்வி கேட்டு பதில் ஆதாரப்பூர்வ பதில் பெற இயலுமா?
  7. சரி, பிரதான எதிர்கட்சித் தலைமை பேட்டியளிக்க ஒப்பு கொண்டால், ஆளும் தலைமையைத் தூக்கியெறிய முற்படுவதைத் தவிர வேறு நோக்கமே இவர்களுக்கு இல்லை என்ற குற்ற சாட்டைக் கேள்வியாக வைக்க முடியுமா?
  8. அவர்களது உட்கட்சி பிரச்சனைகளை வெளிப்படையாக கேள்வி கேட்க முடியுமா, தள்ளாத வயதிலும் இக்கட்சியின் தலைமை ஆட்சி பொறுப்புக்கு வர துடிப்பதையும் கட்சியின் அடுத்த தலைமுறைக்கு வழி விடாமல் இருப்பதாகவும் இக் கட்சிக்குள்ளேயே இருக்கும் கருத்துக்களை மேற்கோள் காட்டி கேள்வி கேட்டு பதில் பெற முடியுமா?
  9. கூட்டணி இன்றி இந்த பிரதான கட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற கருத்தை ஆதாரங்களுடன் கேள்வியாக வைப்பார்களா?
  10. பாரம்பர்யமிக்க இக்கட்சி தேர்தல் கூட்டணிக்காக பேரம் பேசியதா, இவ்வாறு கூறப்படும் குற்றசாட்டுகளை அறுதியிட்டு மறுக்கும் விதமாக கேள்வியெழுப்பி பதில் பெறுவார்களா? முந்தைய காலங்களில் ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள சமரசம் செய்து கொண்டு தேசிய கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டதாக உலவும் கருத்துக்களுக்கு இவர்களின் பதில் என்ன, கேட்க முடியுமா?
  11. குடும்ப அரசியல் குறித்த விமர்சனங்களை மையப்படுத்தி கேள்விகள் கேட்டு பதில் பெற முடியுமா? 12. ஊடகங்களில் ஆளும் குடும்பத்தின் ஆதிக்கம் பற்றி கேள்வி கேட்க முடியுமா? பதில் கிடைக்குமா…..
  12. ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை முக்கியத்துவம் கொடுத்து கட்சிப் பொறுப்புகளில் வைத்திருப்பது குறித்த தார்மீகக் கேள்விகளை வைக்க முடியுமா, பதில் கிடைக்குமா?
  13. குடும்ப அரசியலில் ஈடுபட மாட்டேன் என அறிவித்த, இப்போது தனது மகனையே முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள நிறுவனத் தலைவரிடம் அவரது வாக்குறுதி பற்றி கேள்வி கேட்டு விட ஊடக நெறியாளர்கள் துணிவார்களா?

இது போன்ற கேள்விகளைக் கேட்டு விட்டு தங்களது தொலைக்கட்சி ஒளிபரப்பு அரசு கேபிளில் (இரு பிரதான கட்சிகளின் ஆட்சியிலும்) வெளிவரும் என ஊடக நெறியாளர்கள் நம்புகிறார்களா… இல்லை நம்பிக்கையின்மையால் தான் இது போன்ற பேட்டிகள் எடுக்கப்படுவதில்லையா.
0 c
மேற் சொன்னவையெல்லாம் ஊடக நெறியாளர்களால் கைகூடுமென்றால், பதிவு செய்ய அழைப்பை ஏற்று ஒப்புகொண்ட வைகோவின் நேருக்கு நேர் பேட்டியை, அதுவும், கருத்து வேறுபாட்டால் பாதியில் நிறுத்தப்பட்ட பேட்டியை, செய்தியாக்கியதும் அதனை அனைத்து ஊடகங்களும் கையிலெடுத்து (அவரவர் கோணத்தில்) ஒளிபரப்பியதும், அதனடிப்படையில் விவாதங்கள் நடத்தியதும் சரியே.
மேற் கண்டவை சாத்தியமில்லையென்றால் ஊடக நெறியாளர்கள் , ஊடக அறம் பிறழ்ந்ததற்குத் தலை குனிய வேண்டும்!