ஆக்ரா
ஆக்ராவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் ஆக்ராவில் அதிகம் உருளைக்கிழங்கு விளைகிறது. ஆக்ரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மதுரா, மெயின்புரி, ஃபிரொஸாபாத் ஆகிய இடங்களில் சுமார் 72000 ஹெக்டேர் நிலத்தில் உருளை பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த உருளைக் கிழங்குகளை பாதுகாக்க ஆங்காங்கே குளிர்பதனம் செய்யப்பட்ட கோடவுன்கள் உள்ளன. விவசாயிகள் தங்களிடம் விளைந்த உருளைக் கிழங்குகளை இங்கு பாதுகாத்து வைக்க வாடகை வசூலிக்கப் படுகிறது.
தற்போது உருளைக் கிழங்கு விளைச்சல் மிகவும் அதிகமாகி உள்ளது. தேவையை விட மிக அதிகமாக உள்ளதால் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ. 400 வரை விற்கப்பட்டது. தற்போது அதே மூட்டை ரூ. 10க்கு விற்கப்படுகிறது. அதாவது தற்போது ஒரு கிலோ உருளைக் கிழங்கு 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
குளிர்பதன கோடவுனில் ஒரு மூட்டை உருளைக்கிழங்கை பாதுகாக்க ரூ.110 வாடகை வசூலிக்கப்படுகிறது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் கிழங்குகளை அங்கேயே விட்டு விடுகின்றனர். வாடகை வராததால் நஷ்டமடையும் கோடவுன் உரிமையாளர்கள் தங்களின் மின்சாரச் செலவை மிச்சம் செய்ய மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அழுகிப் போன உருளைக் கிழங்குகள் ஆக்ராவில் சாலை ஓரத்தில் கொட்டப் படுகின்றன.
ஆக்ராவின் சாலை ஓரங்களில் மட்டும் இது போல சுமார் 2.5 டன் அழுகிய உருளைக் கிழங்குகள் கொட்டப்பட்டுள்ளன. இதை சில ஏழை மக்கள் எடுத்துச் சென்று தங்களின் உணவுக்கும் கால்நடைகளின் உணவுக்கும் பயன் படுத்துகின்றனர். இதனால் பல மக்களும் கால்நடைகளும் நோய் வாய்ப்பட்டு அவதி அடைகின்றனர். மருத்துவர்களும் இது போன்ற கிழங்குகளை உண்பதால் நோய்வாய்ப்படுவது மட்டுமின்றி, சாலையில் கொட்டப்படும் கிழங்குளினால் காற்று மாசுப்பட்டு சுவாசக் கோஒளாறுகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயத்துறை இயக்குனர் கௌசல் குமார், “சாலை ஓரத்தில் கெட்டுப் போன உருளைக் கிழங்கை கொட்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். கெட்டுப்போன உருளைக்கிழங்கை அபாயம் இல்லாமல் அழிக்க சில விதிமுறைகள் உண்டு. அவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். இவைகளை ஆழமாக குழி தோண்டி அங்கு புதைக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு சட்டப்படி அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும்.என எச்சரித்துள்ளார்.