சென்னை :
அனைத்துப்பள்ளிகளிலும் ஏன் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை எழுப்பியுள்ளது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பொது நல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு எல்லா பள்ளிகளிலும் சி பி எஸ் ஈ கல்வித்திட்டத்தை ஏன் அமுல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது.
சையத் அம்மல் உயர்நிலைப் பள்ளியின் கரெஸ்பாண்டெண்ட் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்தார். அவருடைய மனுவில் உள்ளதாவது :
நீட் தேர்வு என்பது சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நமது பாடத்திட்டம் பல வருடங்களாக மேம்படுத்தப்படவில்லை. அதுவே நமது மாணவர்களில் அதிகம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு காரணம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடா ஆகியவற்றில் சி பி எஸ் ஈ பாடத் திட்டமே அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. அதனால் அந்த மாநில மாணவர்களால் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஆகவே தமிழ்நாடு அரசும் அதே முறையை பின்பற்றுவது மாணவர்களில் எதிர்காலத்துக்கு மிகவும் சிறந்தது.
இந்த மனு நீதிபதி சசிதரன் தலைமையில் உள்ள பென்சில் விசாரிக்கப்படுகிறது. நேற்று இந்த பென்ச், ”தமிழ்நாடு அரசு ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் பயின்றோருக்கு 85% இட ஒதுக்கீடு மருத்துவத் துறை பட்டப்படிப்பில் வழங்கி வருகிறது. அதற்குக் காரணம் நீட் தேர்வு சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தின் படி அமைந்துள்ளதால் ஸ்டேட் போர்ட் மாணவர்களால் அவர்களுடன் போட்டியிட முடியாது எனவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் அமுல் படுத்தினால் தமிழ்நாடு மாணவர்கள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தடையின்றி வெல்ல முடியும். இதை ஏன் அரசு செய்யக்கூடாது?” என கேள்வி எழுப்பி உள்ளது.