திருப்பூர் அருகில் உத்தமப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை இந்து சமய அறங்காவல் துறை தன் கட்டுப் பாட்டில் இயக்கி வந்ததால், 2010 முதல் தாழ்த்தப் பட்டோரும் கோவிலில் நுழைய அனுமதிக்கப்பட்டு, வழிபட்டு வந்தனர். இதனைச் சகித்துக் கொள்ளாத சாதி இந்துக்கள் மாரியம்மன் கோவில் தீட்டுப் பட்டதால் புனிதத் தன்மையை இழந்துவிட்டதாகக் கருதி புதிய மாரியம்மன் கோவிலைக் கட்டத் தீர்மானித்தனர். அதன்படி புதியக் கோவிலைக் கட்டியதுடன் தாங்கள் கட்டியுள்ளக் கோவிலுக்குள் தாழ்த்தப் பட்டோருக்கு அனுமதியில்லையெனக் கூறியுள்ளனர். சாதி இந்துக்களால் கட்டப் பட்டுள்ள புதியக் கோவிலில் உத்தமப்பாளையம், வேலம்பாளையம், தசவனைக்கன்பட்டி, நாகநாயக்கன்பட்டி, தெங்காளிப்பாளையம், காட்டுப்பாளையம் மற்றும் தலக்கரை ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு அனுமதியில்லை.
1925 ல் “இந்து சமய அறங்காவல்” சட்டமியற்றப் பட்டு இந்து சமய அறங்காவல் வாரியம் நடத்தப் பட்டு வந்தது. 1960ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப் பட்ட இந்து சமய அறங்காவல் துறை பழமையான கோவில்களைத் தங்கள் வசமாக்கி பராமரித்துப் பூஜைகளை நடத்தி வருகின்றது.
உத்தமப்பாளையம், வேலம்பாளையம், தசவனைக்கன்பட்டி, நாகநாயக்கன்பட்டி, தெங்காளிப்பாளையம், காட்டுப்பாளையம் மற்றும் தலக்கரை ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் நீண்டப் போராட்டத்திற்கு பிறகே பழையக் கோவிலில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
“மாரியம்மன் கோவில் அறக்கட்டளை” எனும் பெயரில் புதிய கோவிலைக் கட்டினர். இந்து சமய அறங்காவல் துறையின் கீழுள்ள கோவிலின் பெயரில் அறக்கட்டளை தொடர்ந்தால் சட்டச் சிக்கல் வரலாமென்பதை உணர்ந்தவுடன் அறக்கட்டளையின் பெயரை “புதிய மாரியம்மன் கோவில் அறக்கட்டளை “ எனப் பெயர்மாற்றம் செய்துள்ளனர். பதினோரு அறக்கட்டளை உறுப்பினர்களில், ஒரு தாழ்த்தப் பட்ட இனத்தினருக்குக் கூட வாய்ப்பு வழங்கப் படவில்லை.
புதிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள முயன்ற தாழ்த்தப் பட்ட மக்கள்மீது சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். கடுமையான தாக்குதல் நட்த்தியவர்கள் மீது தீண்டாமைத் தடுப்புப் பிரிவில் வழக்கு பதிவுச் செய்யப் பட்டது. மாவட்ட நிர்வாகம் தாழ்த்தப் பட்ட மக்கள் 149 பேருக்குத் தலா 12,500 ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஒரே ஒருவருக்கு மட்டும் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கியது.
அனைவருக்கும் சமமான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென உத்தமப்பாளைய கோவில் நுழைவுப் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தலித் விடுதலை இயக்க மாநிலத் துணைத்தலைவருமான எஸ்.கருப்பையா வலியுறுத்தினார்.
இந்த ஏழுக் கிராம மக்கள் புதியக் கோவிலில் நுழையச் சட்டப்போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
கோவிலின் உரிமைக் குறித்து நிலவும் சர்ச்சை தாராப்புரம் கிளை-நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமில்லையெனவும், தங்களுக்குத் தான் கோவில் சொந்தமெனவும், கோவிலின் உரிமைத் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் உள்ளதாகவும் புதிய மாரியம்மன் கோவில் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சிகள் சாதி வாக்குவங்கியையும், தேர்தல் வெற்றியையும் கருத்தில் கொண்டு மெத்தனமாய் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே தீண்டாமையும், தாழ்த்தப் பட்டோருக்கெதிரான குற்றங்களும் அதிகரித்து வருவது வருந்தத் தக்கது.