ஸ்டிக்கர்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல அமைப்பினர் உதவி செய்ய நிவாரண பொருட்களுடன் வருகிறார்கள். அவர்கள் வரும் வாகனத்தை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் மற்றும் பூந்தமல்லி பகுதியில் காத்திருக்கும் ஆளும் அ.தி.மு.க.வினர் மடக்குகிறார்கள்.

“நிவாரண பொருட்களின் பேக்கின் மேல் முதல்வர் (ஜெயலலிதாவின்) படத்தை ஏன் ஒட்டவில்லை” என்று அதிகாரத்தோடு கேட்கிறார்கள். பிறகு தாங்கள் தயாராக வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களைக் கொடுத்து, “ நிவார பொருட்களின் பேக்கின் மீது ஒட்டிச் செல்லுங்கள்” என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால், தன்னார்வ அமைப்பினர் பெரும் அதிருப்தி அடைந்தார்கள்.

வடசென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தன்னார்வர்களும் இப்படி மிரட்டப்பட்டனர். வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கோட்டூர் புரம் பகுதிக்கு வந்த அவர்களது வாகனத்தை மடக்கிய ஆளும்கட்சியினர், “அம்மா படம் ஏன் ஒட்டலை” என்று மிரட்டினர். தங்களிடம் முதல்வரிடம் படம் இல்லை என்று தயங்கியபடியே கூறினர். வந்த ஆளும்கட்சி கும்பலிடமும் ஜெயலலிதாவின் படம் இல்லை.  ஆகவே, தன்னார்வ அமைப்பினரின் வண்டியை திரும்பிச்செல்லும்படி கூறினர். இதனால் மனம் நொந்த தன்னார்வ அமைப்பினர், தாங்கள் கொண்டு வந்த நிவாரண பொருட்களை ஆளும்கட்சி கும்பலிடமே கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.

“முதல்வர் பெயரைச் சொல்லி ஆளும் தரப்பினர் செய்யும் இது போன்ற அராஜகங்கள், முதல்வருக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை ஆளும்தரப்பினர் உணர வேண்டும்” என்று பொதுமக்கள் வருத்தத்துடன் சொல்கிறார்கள்.