முதலைமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள “ஈஸ்டர் திருநாள்” வாழ்த்துச் செய்தியில், ’’அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று போதித்த இயேசுபிரான் அவர்கள், கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் கிறிஸ்துவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து பிறரோடு உயிர்தெழுதலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நன்நாளில், உலகமெங்கிலும் அன்பும், அமைதியும் நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், இயேசுபிரான் அவர்கள் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வழங்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ’’இயேசு பெருமானுக்குக் கொடியோர் இழைத்த வன் செயல்களால் நேர்ந்த துன்பங்கள் நீங்கி; இன்பம் மலர்ந்த நாளாக – இயேசு நாதர் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்த நாளாகக் கிருத்துவ சமுதாய மக்கள் 27.3.2016 அன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடுவதையொட்டி தமிழகத்தில் வாழும் கிருத்துவ மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் வந்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு, அவர்கள் ஆற்றிய உன்னதமான தமிழ்த் தொண்டுகளுக்கு நன்றி கூறும் உணர்வோடு 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் சிலைகள் எடுத்துச் சிறப்பித்தது தி.மு.க ஆட்சி!
கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை 1974ஆம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி!
அந்தச் சலுகையை மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்களின் முதல்தலைமுறைக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தலைமுறையினருக்கும் நீட்டித்து 1975ஆம் ஆண்டில் ஆணையிட்டது தி.மு.க. ஆட்சி!
1989ஆம் ஆண்டில் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்துக் கிருத்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலம் பெறச் செய்தது தி.மு.க. ஆட்சி.
கிருத்துவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொழில்கள் தொடங்கிப் பொருளாதார மேம்பாடு காணவேண்டும் என்பதற்காக 1999-ல் ’’தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை’’ தனி அமைப்பாகத் தொடங்கி நிதியுதவிகள் வழங்கியது தி.மு.க. ஆட்சி!
இந்தத் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அதன் தனித்தன்மை கெடும் வகையில் அதனைப் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்து; அதன் முக்கியத்துவத்தைக் குறைத்தது 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு;
எனினும், 2006இல் அமைந்த கழக அரசு மூலம் மீண்டும் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தைத் தனி அமைப்பாக நிறுவி, கிருத்துவர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் தொழில் முனைவோர் ஆகிடவும், சிறுதொழில் மற்றும் குறுந்தொழில்கள் தொடங்கிடவும் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கிட வகை செய்தது தி.மு.க. ஆட்சி!
சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினர் நல இயக்ககம் ஒன்றை 6.4.2007 அன்று தோற்றுவித்தது தி.மு.க. ஆட்சி!
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தது தி.மு.க. ஆட்சி!
மகத்தான தொண்டுகள் மூலம் கருணையின் வடிவமாய்த் திகழ்ந்த அன்னை தெரசா அவர்களைப் போற்றி, அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதுடன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு “”””அன்னை தெரசா மகளிர் வளாகம்”” எனப் பெயர் சூட்டி 1.11.2010 அன்று திறந்து வைத்ததும் தி.மு.க. ஆட்சி!
நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தங்கிச் சமயப் பணிகள் ஆற்றிய பெருமகன் கால்டுவெல் அவர்கள் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரித் திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியதும் தி.மு.க. ஆட்சியே!
1991 முதல் 1999 வரை சிறுபான்மையினரால் தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரத்துடன் கூடிய மானியம் வழங்கி 11,307 ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளித்து ஆணையிட்டது தி.மு.க. ஆட்சி! அந்த ஆணையையும் ரத்து செய்து கிருத்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வேதனைகளைத் தந்துள்ளது அ.தி.மு.க. ஆட்சி.
இப்படி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த போதெல்லாம் கிருத்துவ சமுதாயப் பெருமக்களைப் போற்றி, அவர்களின் நலம்பேணிட சலுகைகள் பல வழங்கி; என்றும் அவர்களுடன் நல்லுறவு வளர்த்து; கிருத்துவ சமுதாய மக்களுக்கு என்றும் துணைபுரிந்து வருவது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை நினைவுபடுத்தி, இந்நன்னாளில் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.’’