eelam
பா.ம.க. நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை ஒரு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அணுகி அவர்களின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கருத்து கேட்டு வருகின்றனர். அகதிகளை அவர்களின் சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கை அனுப்பும் வஞ்சக எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிர் பிழைக்கும் நோக்குடன் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அணுகும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 3 பக்கங்கள் கொண்ட வினாப் பட்டியலைக் கொடுத்து அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்து செல்கின்றனர். இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காகத் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதாக கூறப் பட்டாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பட்டியலில் பல்வேறு வினாக்கள் இடம் பெற்றிருந்தாலும் அவற்றில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் வினாக்கள் ஈழத் தமிழ் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது பற்றியவை தான்.
உங்களுக்கான நிலையான தீர்வாக எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்று வினா எழுப்பப்பட்டு, அதற்கான விடை வாய்ப்புகளாக தன்னார்வத்துடன் இலங்கை செல்வது, இந்தியாவில் நிரந்தரமாக தங்குவது, வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவை தரப்பட்டுள்ளன. ஒருவேளை அகதிகள் தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தால், எப்போது செல்ல விருப்பம்? என்றும், அதற்காக ஏதேனும் உதவி தேவையா? என்றும் துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இது தான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. ஒரு கருத்துக்கேட்பு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுகிறது என்றால் ஒவ்வொரு விடை வாய்ப்புக்கும் துணை வினாக்கள் எழுப்பப்பட்டு, அதன் மீது அகதிகளிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, அகதிகள் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறார்களா? என்றொரு விடை வாய்ப்பு தரப்பட்டுள்ள நிலையில், அதை தேர்வு செய்யும் அகதிகளிடம் ‘‘நீங்கள் இந்தியாவிலேயே தங்க விரும்பினால், உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்? என்னென்ன உரிமைகள் தேவை?’’ என கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல், வெளிநாடு செல்ல விரும்புகிறீர்களா? என்றொரு வினா கேட்கப்பட்டுள்ள நிலையில், அந்த வினாவுக்கு ‘ஆம்’ என பதிலளிப்பவர்களிடம்,‘‘ நீங்கள் எந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறீர்கள்? அதற்காக என்னென்ன உதவிகள் தேவை?’’ என்று கருத்துக் கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் இலங்கைக்கு திரும்ப விரும்புவதற்கு மட்டும் உதவி செய்வதாக கூறுவதன் மூலம் ஈழ அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தான் இந்த ஆய்வின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வை தொண்டு நிறுவனம் தன்னிச்சையாக நடத்த வாய்ப்பில்லை. மத்திய உளவுத்துறையின் சார்பில் தான் நடத்த வேண்டும். இந்த கருத்துக்கேட்பில் சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்ப விரும்புவதாக கூறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், அதனடிப்படையில் ஈழத் தமிழ் அகதிகளை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதும் தான் மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளிடம் ஒரு வகையான பதற்றமும், நிச்சயமற்ற நிலையும் நிலவுவதிலிருந்தே இது உறுதியாகிறது. ஒரு நாட்டில் தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு உணவு, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டியது அந்த நாட்டின் கடமை என்று ஐ.நா. விதிகள் கூறுகின்றன. ஆனால், தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழ அகதிகள் நான்காம் தர மக்களாகத் தான் நடத்தப்படுகின்றனர். 2011-ஆம் ஆண்டுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் கவுரவமாக வாழ வகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய அகதிகள் சிறப்பு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் அவரது காவல்துறை ஒப்புதலுடன் கருத்துக் கேட்பு நடத்தி அகதிகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தான் நடைபெறுகின்றன.
இத்தகைய கருத்துக்கேட்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்கள் விரும்பும் வரை அனைத்து வசதிகள் மற்றும் உரிமைகளுடன் தமிழகத்தில் வாழ வகை செய்து தர வேண்டும். பணி செய்யும் உரிமை உள்ளிட்ட அகதிகளின் உரிமைகளை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.