ஸ்ரீஹரிகோட்டா:

பாகிஸ்தானை தவிர இதர தெற்காசிய நாடுகள் பயன்பெறும் வகையில் “தெற்கு ஆசியா செயற்கை கோள்‘‘ என்ற திட்டத்தை செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் மே 5ம் தேதி இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு போன் மூலம் கூறியதாவது:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தொலை தொடர்பு செயற்கை கோளான ‘‘ஜி சாட்09’’ வரும் மே 5ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2.195 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் 12 கேயு பேண்ட் டிராண்ஸ்பாண்டர்களை சுமந்து செல்லவுள்ளது.

இந்த திட்டத்தில் இணைய பாகிஸ்தான் விரும்பாததால் அந்நாடு சேர்க்கப்படவில்லை. 12 ஆண்டு வாழ்நாள் கொண்ட வகையில் இந்த செய்ற்கைகோளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் அண்டை நாடுகளுக்கு பரிசு வழங்கும் வகையில் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் “சார்க் செயற்கைகோள்” என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

தற்போது இதன் பெயர் ‘தெற்காசியா செயற்கைகோள்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறும் நாடுகளுக்கு டிடிஹெச் முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். மேலும், பேரிடர் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், நூலகம் போன்ற தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும். இதன் மூலம் இந்த நாடுகளுக்கு இடையில் உள்இணைப்பு கிடைக்கும். இதில் பங்கு பெரும் ஒவ்வொரு நாடும் 36 முதல் 54 மெகாஹெர்ட்ஸ் கொள்ளளவு வரை தங்களது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரியில் 104 செய்கைகோள்களை ஒரே நேரத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதில் கார்டோ சாட் 2வது தொடர் செயற்கைகோள் மற்றும் 103 நானோ செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டது. கார்டோ சாட் செயற்கைகோள் 5 ஆண்டு கால வாழ்நாளுடன் கடற்கரை, நிலம், சாலை நெட்வொர்க் கண்காணிப்பு, குடிநீர் வியோகம், நில வரைபட உருவாக்க பயன்படுதல் போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

இதற்கு முன் ரஷ்யா 2014ம் ஆண்டில் 37 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ இதற்கு முன் 2015ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 20 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் செலுத்தியிருந்தது. இஸ்ரோ இது வரை 179 வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 226 செயற்கைகோள்களை செலுத்தியுள்ளது.

குறைந்தபட்சமாக 23 மணி நேர கவுன்டவுனுடன் போலார் செயற்கை கோள் ராக்கெட்டை இஸ்ரோ ஏவியுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து முடிந்ததால் 54 மணி நேர கவுன்டவுனில் இருந்து 23 மணி நேர கவுன்டவுனாக குறைக்கப்பட்டது.