1

பிரிட்டனில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு  மெயில் அனுப்ப வேண்டியிருந்தது. அதை டைப்பிக்கொண்டிருந்தபோதுதான்   வினோதகன் வந்தார்.  பெரும் படிப்பாளி. கலாரசிகர்.  அதற்குப்பிறகுதான் தொழிலதிபர்.

“வாரும் வாரும்..” என்று அவரை வரவேற்றபடியே டைப்பினேன்.

“வரவேற்பு இருக்கட்டும்…  பீப் பாடலைப் பற்றி கேட்ட பத்திரிகையாளரை “அறிவிருக்கா”னு எகிறிட்டார் திரைப்பட இசையமைப்பாளர்  இளையராஜா. தெரியுமா..” என்றார்.

டைப்புவதை நிறுத்திவிட்டு, “இன்னைக்கு  முக்கியமான சிலவேலைகள்..  சினிமா சங்கதிகளை கவனிக்க நேரமில்லை… ” என்றேன்.

வினோதகன் சொல்ல ஆரம்பித்தார்:

“வெள்ள நிவாரணம் தொடர்பான ஒரு பாராட்டு விழாவில் கலந்துகிட்ட இளையராஜாகிட்ட பத்திரிகையாளர் கேட்டதையும் அதுக்கு இளையாராஜா சொன்ன பதிலையும் அப்படியே சொல்றேன். கேட்டுக்கோ…

செய்தியாளர்: சிம்பு  ஆபாசமா பாடிய பீப் பாடல்  பற்றி?

இளையராஜா: உனக்கு எதாவது இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?

செய்தியாளர்: சார், அறிவு இருந்ததால தான் கேக்குறேன்!

இளையராஜா: அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?

செய்தியாளர்: ஒரு இசையமைப்பாளர் நீங்க? உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?

இளையராஜா: (சிரித்தபடி) யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு.. ”

இதான் இருவருக்கும் நடந்த உரையாடல்” என்று முடித்தார் வினோதகன்.

நான், “இளையராஜா சொன்னது ஞாயம்தானே.. அவரு எத்தே பெரிய இசையமைப்பாளரு.. பக்திமான்..  ஞானி.. அவருகிட்ட போயி இதைக் கேட்கலாமா. அதுவும் வெள்ள நிவாரண நேரத்துல” என்றேன்.

ராமண்ணா
ராமண்ணா

சிரித்த வினோதகன்,  “வெள்ள நிவாரண நேரத்துல கேள்வி கேட்கல.. அதுக்காந நன்றி கூட்டத்துலதான் கேட்டிருக்காரு பத்திரிகையாளர்”   என்று சொல்லிவிட்டு, “சரி..  நான் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு.

      1. இளையராஜா இசை அமைப்பதோடு, பாடல் என்ற பெயரில் எழுதவும் செய்திருக்கிறார். பாடியும் இருக்கிறார். சக சினிமாக்காரர் செய்த விவகாரம் பற்றி பதில் சொல்வதில் என்ன தடை?
      2. “யார்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய என்னை கேட்கிற” என்று இளையராஜா கூறியிருப்பதன் மூலம், பீப் பாடலை கண்டித்த அனைவரையும் அவமானப்படுத்தி இருக்கிறார். அதாவது மோசமானவர்கள்தான் அந்த பாடலைப்பற்றி விமர்சனம் செய்வார்கள். நானே அந்த பாடலை காது கொடுத்தும் கேட்க மாட்டேன் என்கிற அர்த்தத்தில் சொல்கிறார். சமுதாயத்தில் அனைவரும் கண்டிக்க வேண்டிய விசயம் அல்லவா இது?

3.  அவர்  இசைமயைத்த பல பாடல்கள் அற்புதமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரும்  அப்படி ஒன்றும் உத்தமமானவர் இல்லையே.. சிம்புவுக்கு முன்னோடி இவர்தானே..? நேத்து ராத்தி யம்மா.. நிலா காயுது.. போன்ற பாடல்களில் முக்கல் முனகல்களை பாடச் சொல்லி,  முதன் முதலில் காதுக்குள் படுக்கை அறையைக் கொண்டுவந்தவர் இவர்தானே…? மொட்டை அடித்து, ஜிப்பா போட்டால் ஞானி ஆகிவிடுவாரா?” -கேள்விகளைக் கேட்டுவிட்டு என்னையே பார்த்தார் வினோதகன்.

என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை!