சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் இந்த மழை வெள்ளத்தால் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. லட்சக்கணக்கான மக்கள், வீடு வாசலை இழந்து அகதிகளாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் மழை அல்ல… வாராது வந்த மாமணியான மழையை பயன்படுத்த விருப்பமில்லாத திமுக மற்றும் அதிமுக அரசுகள்தான். ஆம்.. ஆண்ட கருணாநிதியும், ஆளும் ஜெயலலிதாவும்தான் மக்களின் வேதனைக்குக் காரணம்!
இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரி கூறியதாவது:
“சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 2005ம் வருடம் மிகப்பெரிய அளவில் மழை பெய்து, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை இணைந்து, பல ஆய்வுகள் மேற்கொண்டன. சென்னை பகுதியில் பெய்யும் மழை நரை, உகந்த முறையில் சேமித்து வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதே ஆய்வுகளின் நோக்கம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 20 இடங்களில் அண்ணா பல்கலை சார்பில், தானியங்கி வானிலை ஆய்வு கருவிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியின் மழை அளவு தனித்தனியாக கணிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும்; எவ்வளவு தண்ணீர் தேங்கும்; அந்த நீர் சென்று தேங்கும் தாழ்வான பகுதி எது; அவற்றில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் எவை என தகவல்கள் திரட்டப்பட்டு, அந்த திட்டம் சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம், 2009ல் அளிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை இந்த ஆய்வை, இரு துறைகளும் கண்டுகொள்ளவே இல்லை.
அண்ணா பல்கலையின், ‘ரிமோட் சென்சிங்’ ஆராய்ச்சி துறை, மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, விமானம் மூலம் வெள்ள பகுதிகளை படமெடுத்து, தகவல்களை சேகரித்தது. இதில், தொழில் நுட்ப ரீதியான ஆய்வுக்காக, ‘லைடார்’ எனப்படும் ஒளிக்கதிர் வீச்சு மூலம், நவீன, ‘டிஜிட்டல் கேமரா’ மூலம் விமானத்தில் இருந்து படம் எடுக்கப்பட்டு, நீர் தேங்கும் தாழ்வான பகுதி மற்றும் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டன. இந்த அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்து, ஆறு ஆண்டுகளாகின்றன. ஆனால் அப்படியே கிடப்பில் கிடக்கிறது திட்டம்.
அதுமட்டுமல்ல… சென்னை பல்கலை, மத்திய அரசுடன் இணைந்து மழைநீர் வடிகால் தொடர்பான ஆராய்ச்சியும் செய்தது. சென்னையில் உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் எத்தனை; அவற்றில் தற்போதைய நிலை என்ன என ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், பல இடங்களில், மழைநீர் வடிகால்வாய்கள் தலைகீழாக, அதாவது நீரோட்டத்துக்கு எதிர் திசையில் அமைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பல கால்வாய்கள் சிதிலமடைந்து விட்டதும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து மழைநீர் கால்வாய்க்கு சட்ட விரோதமாக இணைப்பு கொடுக்கப்பட்டு, கழிவுநீரும், குப்பையும் சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம், இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை வைத்து, மழைநீர் கால்வாய் கட்டமைப்பை, நவீன தொழில் நுட்பத்துடனும், புவி அமைப்பியலுக்கு ஏற்ப, வல்லுனர்களின் ஆய்வுப்படி மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டமும் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. அதுவும் கம்டுகொள்ளப்படவில்லை.
தற்போதைய வெள்ள பாதிப்புக்கு திமுக காரணம் என்று அதிமுகவும், அதிமுக காரணம் என்று திமுகவும் குற்றம்சாட்டிக்கொள்கின்றன.
ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் திமுகவை தற்போதைய ஆளும்கட்சி குறை சொல்வது வெட்கட்கேடானது. அதே போல, தங்களது ஆட்சியி்ல் உருப்படியான நடவடிக்கை எடுக்காத திமுக, வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதும் வெட்கட்கேடானதே!