பெரியார் என்று அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமுதாயத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்ற அயராது போராடியவர்.
வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக வாழ்ந்தார். அதையே பரப்பினார்.
அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் சமுதாயத்தில் இருந்து நீக்கியது.
தமிழ் எழுத்துகளின் சீரமைப்புக்கு குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார் இவரது சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் “புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மூடத்தனமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.