கா. நமச்சிவாயம் பிறந்தநாள்(1876)
தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியரான கா. நமச்சிவாயம், வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி – -அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தனது ஆரம்பகால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது வயதில், , சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார்.
1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.
அச்சமயம் பள்ளிப்பாட நூல்கள் அரசுடமை ஆகவில்லை. நமச்சிவாயரின் நூல்களைப் பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதிப் பிழைத்து வந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார்.ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது.
மேலும் அந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து நமச்சிவாயரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற நமச்சிவாயருக்கு ஆணை வழங்கியது.
இப்படி தமிழ்ப்பாடத்தை அளித்த முதல் தமிழர், கா. நமச்சிவாயம். இவர்,
மார்ச் 13, 1936 அன்று மறைந்தார்.
மலேசியா வாசுதேவன் நினைவு நாள் (2011)
கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் – அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார்.. இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் “பொல்லாத உலகில் ஒரு போராட்டம்” என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா… என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களிலும் நடித்தார். “சிலந்தி வலை” உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய “மலர்களிலே அவள் மல்லிகை” என்ற படத்துக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.
அருணாசல பிரதேசம் உருவான நாள் (1987)
வண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த துறவிகளின் மந்திர ஒலிப்புகள் மற்றும் அன்போடு உபசரிக்கும் பூர்வ குடிமக்கள் என்று தனித்துவத்துடன் விளங்கும் மாநிலம் அருணாசல பிரதேசம்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பபட்டது. இந்தியாவின் எல்லை மாநிலம் அருணாச்சல் பிரதேசம்; சீனாவை ஒட்டி அமைந்துள் ளது. அருணாச்ச பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடும் சீனா, அதை ஒட்டிய தனது திபெத் பகுதியில் ஹெலிகாப்டர் தளத்தையும் அமைத்துள்ளது. ஆனாலும், இந்தியா எப்போதும் தன் உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை..
.
உலக சமூக நீதி தினம்
சமூக நீதி என்பது சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளைப் பெற்று அவன் சுய கவுரவத்துடன் வாழ வழி அமைப்பதாகும். . இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூக நீதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு முதன்மையான கடமைகளில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக நமது மக்களில் பெரும்பான்மையினருக்கு வாய்ப்புகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்த அநீதியை அகற்ற நலிவடைந்த பிரிவினருக்கு சலுகைகள் வழங்கிட வேண்டும். இந்த சலுகைகள் என்பது நலிந்தோருக்கு செய்ய வேண்டிய கடமை என்பதை உணர வைக்கும் நாள் இது.