இன்று தைப்பூசம் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்பபடுகிறது. உலக கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் சிறப்பான தைப்பூசம். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பது ஆன்றோர்களின் வாக்கு.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது. இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பதும் நலம் தரும்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.
“தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறு கின்றன.
இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.
இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணை செய்யும். எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச் செய்யும்.
தமிழகத்தில் பழனியில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. முருகன் கோவில்களில் அடியார்கள் பல்வேறு வகையான காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுவார்கள். இதனை தொடர்ந்து 24 தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூச திருவிழாவானது நிறைபெறுகிறது.
இன்றைய தினம் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
அதுபோல வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
பழனியில் தைப்பூசம்
பழனி (திருவாவினன்குடி – சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.இங்கு பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதுபோல மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் நடைபயணமாகவும் காவடி எடுத்தும் பழனியில் குவிந்து வருவதும் வழக்கம்.
காவடிகளில் பல வகை
அலகு குத்துதல்: நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவி லுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
சர்க்கரை காவடி: சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தீர்த்தக் காவடி: கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பறவைக் காவடி: அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி: பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மச்சக்காவடி: மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மயில் காவடி: மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தைப்பூசத்தன்று தவப்புதல்வனான முருகனை இன்று தரிசித்தால் ஞானம் நம் வசப்படும் என்பது ஐதிகம்.
சுபம்
முருகனுக்கு அரோகரா…! கந்தனுக்கு அரோகரா…..!