எட்டாம் வகுப்பு சிறுமி செம்பருத்தியின் வேண்டுகோளை ஏற்று தனது தொகுதி நிதியில் இருந்து கொளப்பாடி கிராமத்தில் நூலகம் கட்டித்தந்திருக்கிறார் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர்.
அது மட்டுமல்ல.. தன்னிடம் வேண்டுகோள் வைத்த அந்த மாணவியையே நூலக கட்டிடத்தைத் திறக்கச் செய்து, கல்வெட்டிலும் அந்த சிறுமியின் பெயரை பொறிக்கச் செய்திருக்கிறார் சிவசங்கர்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சிவசங்கர் எழுத, ஏராளமானவர்களின் பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது. இதற்கு அடுத்து சிவசங்கர் எழுதிய பதிவும் நெகிழ வைக்கிறது.
அந்த பதிவு இதோ..
“ஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவதன் மூலம் மற்றவர்களை இது போல் பணியாற்றத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் தான் செம்பருத்தியை திறப்பாளராக அழைத்தேன்.
ஆனால் இது இன்னொரு கோணத்தில் பார்க்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. விழா சிறப்புற்ற மகிழ்ச்சியில், அடுத்தப் பணிக்கு கிளம்பினேன். அரியலூர் நிகழ்ச்சிக்கு அண்ணன் ஆ.ராசா அவர்களோடு கிளம்பும் போது காரில் நிலைத்தகவல் பதிவிட்டேன்.
விழா மேடைக்கு செல்லும் முன் பார்த்தேன். லைக் வேகம் திணறச் செய்தது.
நிகழ்ச்சி முடிந்து தவறிய அழைப்புகளை பேசினேன். தேனியில் இருந்து எப்போதும் நையாண்டியாக பேசும் சுந்தரத்தின் குரல் பிசிறடித்தது. “அண்ணே உருக்கமாயிருக்கு”. கத்தாரில் இருந்து சதக் அழைத்தார். நிலைத் தகவலின் வீச்சு புரிய ஆரம்பித்தது.
மெல்ல இன்பாக்ஸ் நிரம்ப ஆரம்பித்தது. முழுநாள் அலைச்சலில் அசந்தேன். காலை ஆறரை சிங்கப்பூரில் இருந்து செல்வபூபதி, “அண்ணே, கெத்தா சொல்லிப்போம்”. அமெரிக்காவிலிருந்து மாதவன்,”கனடா நண்பரோடு விவாதித்தேன் அண்ணா. மகிழ்ச்சியா இருக்கு”. தொடர்ந்து உள்ளூர் அழைப்புகள்.
“இன்று எந்த நிலைத்தகவலும் போடக் கூடாதுன்னு நினைச்சேன். போட வச்சிட்டிங்கண்ணே. அந்த பொண்ணுக்கு சிங்கை சிங்கங்கள் உதவ தீர்மானிச்சிருக்கோம்”, சிங்கப்பூரில் இருந்து நரசிம்மன். “அந்த நூலகத்திற்கு நான் ஏதாவது செய்யனுமே”, கௌரா பதிப்பகம் அண்ணன் ராஜசேகர். 8.00மணிக்கு சொக்கநாதபுரம் சமுதாயக் கூடம் திறக்க செல்லும் போதே இந்த அழைப்புகள்.
விராலிமலை உதயக்குமார் அழைத்தார்,”இண்டியன் எக்ஸ்பிரஸில் செய்தி வந்திருக்கு. வாழ்த்துக்கள்”. ஹிந்துவில் இருந்து சுருதி சாகர் அழைத்து விபரம் கேட்டார். பெரியாக்குறிச்சி பள்ளிக்கட்டிடம் அடிக்கல் நாட்டும் போது தொடர் அழைப்புகள். டெக்கானிக் கிரானிக்கலில் இருந்தும் விபரம் கேட்டனர்.
தொடர்ந்து நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கட்சி பேதம் இல்லாமலும் மகிழ்ச்சிப் பரிமாறல். பெரம்பலூர் தினகரன் நிருபர் வில்சன் கோபித்துக் கொண்டார் உரிமையோடு,”எங்களுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை?”. “இல்லண்ணே. நேர நெருக்கடி. அடுத்தது நான் அந்தப் பெண்ணை உற்சாகப் படுத்தவே இது போல் செய்தேன்”.
நியூஸ்7 முருகானந்தம் “என்ன அண்ணே, எவ்வளவு முக்கியமான செய்தி. சொல்லாம விட்டுட்டீங்களே”என்றவாறே பேட்டி எடுத்தார். வசந்த் டீவி,”சார், நீங்க சாதாரணமா நினைச்சிருக்கலாம். ஆனா இது வரலாறாக போற விஷயம்”என்றார். நிகழ்வின் வெவ்வேறு பரிமாணங்கள் புரிந்தது.
கல்வெட்டு அடித்துக் கொடுத்தவர் பேச தவிக்கிறார் என்றார்கள். பேசினேன். “சார், உங்க நம்பர் கிடைக்காம, கல்வெட்டில் இருக்கும் என் நம்பரைப் பார்த்து பேசினார்கள் பலரும். அதில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். உண்மையாக நம்ம ஊரில் இப்படி கூட நடக்குதா என்றுக் கேட்டார். நான் தயாரித்த கல்வெட்டுகளிலேயே இது தான் உயர்ந்தது” என்று மனதைக் கொட்டினார்.
விகடன் வலைதளத்தில் செய்தி வந்து விட்டது என அழைப்பு. இப்போது முகம் தெரியாதவர்கள் எல்லாம் அழைத்து வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். “சார் விகடன்ல பார்த்தேன். நெட்ல நம்பர் எடுத்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எப்போதும் இதே போல் இருங்கள்”.
அடுத்து நான் அழைக்க நினைத்தவர், என்னை அழைத்துவிட்டார். அலைபேசி ஒளிர்ந்தது,”செம்பருத்தி IPS”. ஆம், அப்படி தான் பதிவு செய்திருக்கிறேன்.
“சார் ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடப் படிக்கிறவங்க பாராட்டுனாங்க. டீச்சர்லாம் பெருமையா இருக்குன்னாங்க”
“என் கிட்ட கேக்கனும்னு எப்படி தோணுச்சும்மா?”
“சார், அப்போ நீங்க யாருன்னு தெரியாது. யாரோ அதிகாரி வந்துருங்காங்கன்னு நெனச்சி வந்து சொன்னேன். நேத்து இந்த தட்டிய பார்த்து தான் நீங்க யாருன்னு தெரிஞ்சுது. என் ப்ரெண்ட்ஸ் கூட கலாய்ச்சாங்க, இது நடக்குமான்னு. நான் மனு கூட கொடுக்கல. எப்படி ஞாபகம் வச்சி செஞ்சீங்க. ரொம்ப பெருமையா இருக்கு”
“சந்தோஷம்மா. நல்லா படி. சொன்ன மாதிரியே ஐ.பி.எஸ் ஆகணும். கூடப் பொறந்தவங்க எத்தனப் பேரு?”
“கண்டிப்பா படிக்கிறேன் சார். அக்கா ஒருத்தவங்க. கல்யாணம் ஆயிடுச்சி. அண்ணன் ஒருத்தவரு”
“அண்ணன் என்ன பண்றாரு?”
“அண்ணன் பத்தாவது தான் படிச்சாரு. வசதி இல்லாததால அதுக்கு மேல படிக்கல. வியாபாரம் பண்றாரு. உங்களுக்கு எத்தன பசங்க சார்?”
“ரெண்டு பேரும்மா. பெரியவர் பிளஸ் ஒன். சின்னவர் நாலாவது”
“பொண்ணு இல்லீங்களா சார்?”
“இல்லம்மா”
“கவலைப்படாதீங்க. இனி நான் உங்க பொண்ணு”
# ஒரு நிகழ்வு, பல பரிமாணங்கள், புதிய உறவுகள் !”