a

சென்னை :

ந்திராகாந்தி. ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தபால் தலைகளுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை (18.09.15) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களும், முன்னாள் பிரதமர்களுமான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ஆகியோர் உள்ளிட்ட தலைவர்களின் தபால் தலைகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. “இவர்களெல்லாம் நாட்டை கட்டமைத்தவர்கள்தான். ஆனால் நாட்டை உருவாக்கியவர்களுக்கே தபால் தலைகள் வெளியிடவேண்டும்” என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசை எதிர்த்து நாளை, தபால் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.E.V.K.S.ELANGOVAN

அவர், “பாரதீய ஜனதா அரசு அமைந்ததில் இருந்து இந்திய போராட்ட வரலாற்றையும், சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களின் பெருமையையும் சிதைத்து வருகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தியாகி என்று சொல்லும் அளவிற்கு பாஜகவுக்கு துணி்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நவ இந்தியாவின் சிற்பிகள் என்ற பட்டியலில் 12 தலைவர்களை சேர்த்து, அவர்களது தபால்தலைகள் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள் இடம்பெற்று இருந்தனர்.    ஆனால் இதைச் சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசு, அந்த பட்டியிலில் இருந்த தலைவர்களின் அஞ்சல் தலைகளை வெளியிடுவதை நிறுத்தி வைக்க ஆணையிட்டிருக்கிறது. தவிர புதிதாக 16 பேரை அந்த பட்டியலில் சேர்த்து அவர்களது தபால்தலைகளை வெளியிடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திப் பிடிப்பதற்கும் தங்களையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள் அன்னை இந்திராவும், தலைவர் ராஜீவ் காந்தியும் ஆவார்கள். அவர்களது அஞ்சல்தலைகளையே நிறுத்தி வைக்க முடிவெடுத்திருக்கிறது பாஜக அரசு. இதைக் கண்டித்து நாளை ( 18.09.15) காலை பத்து மணிக்கு அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்”

இவ்வாறு தனது அறிக்கையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.