நாக்பூர்

ஆர் எஸ் எஸ் இயக்கம் மக்களவை தேர்தலில் ராமர் கோவில் விவகாரத்தை பின் தள்ளி விட்டு புல்வாமா தாக்குதலை முன்நிறுத்த திட்டமிட்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு  ஓவ்வொரு பகுதியில் உள்ள தொகிதிகளின் கூட்டத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தி வருகிறது.    இதில் விதர்பா பகுதிக் கூட்டம் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் சமீபத்தில் நடந்தது.   இதில்  இந்த பகுதியில் உள்ள 36 தொகுதிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

மக்களவை தேர்தலில் மோடியை முன் நிறுத்தும் வகையில் ஆர் எஸ் எஸ் இயக்கம் வீட்டுக்கு வீடு மோடி என்னும் திட்டத்தை நடத்தி வருகிறது.   இது வரை இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட பிரசாரத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.    எனவே இந்த கூட்டத்தில் இனி தனது பிரசாரத்தில் ராமர் கோவில் விவகாரத்தை பின் தள்ள அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது புல்வாமா தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில் மேலும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க நிலையான அரசு தேவை எனவும் அந்த நிலையான அரசை அமைக்க மோடியால் மட்டுமே முடியும் என பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வீடாக சென்று நிலையான அரசு அமைக்க மோடியால் மட்டுமே முடியும் என பிரசாரம் செய்யவும் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த பிரசாரத்தின் போது ஏற்கனவே பாஜக ஆதரவு வீடுகளில் பிரசாரம் செய்வதற்கு பதில் பாஜகவுக்கு எதிரானவர்களிடமும் நடுநிலை வாதிகளிடமும் ஆர் எஸ் எஸ் பிரசாரம்  செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.