ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ மத தலைவர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ மத தலைவர்கள்

க்யூபா:
பிளவு ஏற்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கிறிஸ்தவ மத தலைவர்கள் இருவர் சந்தித்து பேசிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ மத தலைவர்களான போப் மற்றும் ரஷ்யன் ஆர்தோடொக்ஸ் சர்ச் தலைவர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.
சர்ச் நிர்வகிப்பது தொடர்பாக கடந்த 1054ம் ஆண்டு இரு மத தலைமைக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதன் பிறகு கடந்த ஆயிரம் ஆண்டுகளாக போப்பாக இருந்தவர்களும், ரஷ்யன் ஆர்தோடொக்ஸ் சர்ச் தலைவர்களாக இருந்தவர்களும் சந்தித்து பேசியது கிடையாது.
இந்நிலையில் தற்போதைய போப் பிரான்சிஸ் மற்றும் ரஷ்யன் ஆர்தோடெக்ஸ் தலைவர் கிரில் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். க்யூபாவில் உள்ள ஹவானா விமானநிலையத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தனர். மூன்று முறை முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் நீண்ட நாட்களாக இரு மத தலைமைக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்து பேசினர்.
மெக்சிகோவில் 5 நாள் பயணமாக போப் பிரான்சிஸ் சென்றுள்ளார். இந்த சமயத்தில் நடந்த இந்த சந்திப்பு இரு மத அமைப்புகளிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு திறந்த ஜீப்பில் போப் வாட்டிக்கன் தூதரக மாளிகைக்கு சென்றார். அவருக்கு மக்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மெக்சிகோவில் வறுமை மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக போப் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.