சென்னை:
“ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா?” என்று காட்டமாக கேட்டிருக்கிறார் தி.மு.க. மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி.
சமீபத்தில் தமிழ் வாரமிருமுறை இதழில் பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடை பற்றிய அட்டைப்பட கட்டுரை வெளியானது. இதற்கு பெண்ணுரிமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலைியல் திம.க மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி.யும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
“தமிழ் வாரம் இருமுறை இதழ் ஒன்றில் வெளியான, பெண்களின் உடை தொடர்பான கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதழியல் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற ‘கலாசாரக் காவல் தனம்’ வன்மையான கண்டனத்துக்குரியதாகும். பெண்கள் இன்னும் வெறும் போகப் பொருளாகவே பார்க்கப்பட்டு வருவதற்கு, இதுபோன்ற நிகழ்வுகளே கசப்பான உண்மை மிகுந்த சாட்சிகள்.
பெண்களும் ஆண்களுக்கு நிகரான இந்நாட்டின் குடிமக்கள்தான் என்பதையும், பெண் சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திச் சொல்லவேண்டிய நேரம் இது. பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்… வேலைக்குப் போனால் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா?
நம் நாட்டில் இன்னமும் கௌரவக் கொலைகள் நடந்துவருவது துன்பம் மிகுந்த உண்மை நிலவரமாக உள்ளது. மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் இந்நாட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சத்தமின்றி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன இந்தியாவின் பெண்கள் யாரோ அல்ல… அவர்கள் நம் சக மனிதர்கள்தான் என்பதை, நாட்டின் அரசியல் சமூக அமைப்புகளோடு ஊடக நிறுவனங்களும் உணர்ந்து அதன்படி நடந்துகொள்ளவேண்டும்.
இவ்வகையில்… நம் நாட்டுப் பெண்களுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிச்சயம் உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டே இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் கனிமொழி தெரிவித்துள்ளார்.