கரூர் மாவட்டம் கொடிகம்புதூரை சேர்ந்த தலித் இளைஞர் வினோத். கடந்த 2009-2012ம் கல்வி ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு படித்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்ற மாங்காடு பகுதியை சேர்ந்த பிரியங்காவுடன் காதல் துளிர்த்தது.
கல்லூரி காலம் முடிந்து தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்தார் வினோத். காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் பிரியங்கா வீட்டினருக்கு விசயம் தெரியவர, பிரச்சினை வெடித்தது.
“தாழ்ந்த சாதி ஆளையா காதலிக்கிறே” என்று சொல்லி பிரியங்காவை அவரது பெற்றோரும், தாய்மாமனும் கடுமையாக தாக்கினார்கள். கால்களில் பலமாக உலக்கை கொண்டு அடித்து நகரமுடியாமல் செய்தனர். பிறகு வீட்டின் ஒரு அறையில் அடைத்துவைத்தனர். தங்கள் சொந்தத்திலேயே திருமணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார்கள்.அதற்கு பிரியங்கா உடன்படவில்லை. ஆகவே சித்திரவதை அதிகமானது.
இந்த நிலையில் பிரியங்கா எப்படியோ தனத காதலன் வினோத்துக்கு செல்போனின் வாட்ஸ் அப் செய்தி கொடுத்தார். அதில், “என்னை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்கிறார்கள் என் பெற்றோர். என்னை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. என்னை மீட்டு அழைத்துப்போ” என்று இருந்தது.
இதனால் பதற்றமான வினோத் தனக்கு அறிமுகமான எழுத்தாளர் குணாவுடன் சென்று புதுக்கோட்டை எஸ்பி. அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, பிரியங்காவை மீட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
பிரியங்காவை, திருச்சி அரசு இல்லத்தில் இருக்கம்படி உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார் வினோத்.
நேற்று அந்த வழக்கில், “பிரியங்கா மேஜர் பெண். அவர் விருப்பப்படி வாழலாம்” என்று தீர்ப்பானது.
இதையடுத்து பிரியங்கா, தனது காதலர வினோத்துடன் சென்றார். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மூகாம்பிகை கோயிலில் எளிமையாக திருமணம் நடந்தது.
காதலர்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்த எழுத்தாளர் துரை.குணா, . வழக்கறிஞர்கள் வனஜா, ஜெயந்திமாலா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக தலைவர் செல்வன், திராவிடர் விடுதலை கழக பூபதி கார்த்திகேயன் ஆகியோர் மணமக்களை உடனிருந்து வாழ்த்தினர்.
மாப்பிள்ளை வினோத் குடும்பத்தாரும் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.