வரும் சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் தேவி என்ற திருநங்கை போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் திருநங்கை இவர்தான்.
இந்தத நிலையில் சுதா என்ற திருநங்கை அ.தி.மு.க. சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து அக் கட்சி தலைமயகத்தில் நாளை விருப்பமனு கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
அவரிடம், “அ.தி.மு.க. சார்பாக போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்டு முடிந்துவிட்டதே” என்றோம். அதற்கு அவர், “மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தேன். அதனால் காலதாமதம் ஆகிவிட்டது. ஆனாலும் மைனாரிட்டியான திருநங்கை இனத்தின் சார்பாக விருப்பமனு தாக்கல் செய்வதால் புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) என்னை வேட்பாளராக நிறுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த சுதா சென்னையில் சமூகசேவை அமைப்பை நடத்தி வருகிறார்.
“அ.தி.மு.க.வின் உறுப்பினரா..” என்றால், “இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை. அம்மா மீது பாசம் உண்டு. அந்த நம்பிக்கையில் விருப்பமனு அளிக்கப்போகிறேன்” என்கிறார் சுதா. மேலும், “குறிப்பிட்டு எந்த தொகுதியும் கேட்கவில்லை. அம்மா கைகாட்டினால் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்கலாமே..” என்கிறார்.
நாளை காலை தனது அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளுடன் சென்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அளிக்க இருக்கும் இவரிடம், “அ.தி.மு.கவை தேர்ந்தெடுக்க காரணம் என்ன” என்றோம்.
“அதான் சொன்னேனே.. அம்மா மீது பாசம், பக்தி உண்டு. அவங்க நிர்வாகத்திறன் பார்த்து பிரமிச்சிருக்கேன். சென்னையில திடும்னு (!) வெள்ளம் வந்தப்போ, திறமையா நிர்வாகம் பண்ணி நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்தார். அது ஒண்ணு போதாதா.. அம்மா மேல பாசம் வைக்க..” என்றார் திருநங்கை சுதா.
அவருக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.