சென்னை:
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலில் இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயங்கும் பறக்கும் ரயில், பயணிகளில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சென்னையின் முக்கியமான வழித்தடத்தில் இந்த ரயில் தடம் செல்வதால், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
பேருந்தைவிட கட்டணம் குறைவு என்பதாலும் வசதியாக, விரைவாக சென்று வரலாம் என்பதாலும் பெரும்பாலனவர்கள் பறக்கும் ரயிலில் பயணிப்பதையே விரும்புகிறார்கள்.
ஆனால் இந்தத் தடத்தில் ரயில் பராமரிப்பு மிக மோசமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். சில பெட்டிகளில் மின்விசிறியின் ஒயர்கள் அறுந்து தொங்குகின்ரன, இருக்கைகள் உடைந்தும் கிடக்கின்றன.,சில பெட்டிகளில் கதவு தானாகவே திறந்து மூடுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என்று புகார் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கடற்கரை ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ஓரிரு பெட்டிகளில் மட்டுமே இதுபோன்று இருக்கிறது. அதையும் கவனித்து சரி செய்வோம். மேலும் விவரங்களுக்கு உயர் அதிகாரிகளிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்கள்.
சரியான பராமரிப்பு இல்லாததால் தமிழக அரசின் போக்குவரத்து நிறுவன பேருந்து ஒன்றில் ஓட்டை ஏற்பட்டு அதன் வழியாக பெண் ஒருவர் விழுந்ததும், அந்த காட்சி வாட்ஸ் அப்பில் பரவியதும் சமீபத்தில் நடந்தது.
அது போன்ற விரும்பத்தகாத சம்பவம் நடக்கும் முன் தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க வேண்டும்.