ராஜ்கோட்

ரசு குடும்பத்தினர் இடையே பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ராஜ்கோட் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் 400 ஆண்டுகளாக ராஜ்கோட் சமஸ்தானம் உள்ளது.  இந்த சமஸ்தானத்தின் 16 ஆம் மன்னராக இருந்த மனோகர்சிங் ஜடேஜா கடந்த 2018 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் எம் பி ஆவார்  குஜராத் மாநில நிதி அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார்.  அவருடைய மறைவுக்குப் பிறகு  மகன் மந்தாத்த சிங் ஜடேஜா அந்த சமஸ்தான மன்னராக முடி சூட்டிக்கொண்டார்.

மந்தாத்த சிங் சகோதரியின் பெயர் அம்பாலிகா தேவி ஆகும்.   இவர் தனது சகோதரன் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்துள்ளதாக ராஜ் கோடி சிவில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்துள்ளார்.  இந்த செய்தி குஜராத் மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அம்பாலிகா தேவியின் வழக்கறிஞர் கேதன் சிந்தவா இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது அவர், “மறைந்த மன்னரில் உயிலில் மந்தாத்த சிங் ஜடேஜா சில திருத்தங்கள் செய்து அதிக மதிப்புள்ள நிலங்களை தனது பெயருக்கு மாற்றி உள்ளார்.  தனது சகோதரி அம்பாலிகா தேவியிடம் இதை மறைத்து சொத்துரிமை குறித்த பத்திரங்களில் கையெழுத்து வாங்கி உள்ளார்.  தற்போது இது தெரிய வந்ததை அடுத்து துணை ஆட்சியரிடம் முறையிட்டுப் பெயர் மாற்றத்தை நிறுத்தி வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மன்னர் ஜடேஜாவின் வழக்கறிஞர் நிரவ் தோஷி, “மன்னரின் சகோதரி அம்பாலிகா தேவி தனது கணவர் மற்றும் மகன்கள் முன்னிலையில் ரூ.1.5 கோடி  பெற்ற பிறகே பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ளார்.   எனவே இந்த வழக்கு தவறானது.  மன்னர் எவ்வித மோசடியும் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.