அரசி எவ்வழி, அடிமைகள் அவ்வழி என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு, நகர் முழுதும் அனுமதி இன்றி பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பேனர் கிழிப்பு, வழக்கு என்றெல்லாம் போனது.
இப்போது ஞ்சை நகரின் முக்கிய சாலைகளில் எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதத்தில் பேனர் வைத்திருக்கின்றனர் அ.தி.மு.க.வினர். ஆகப்பெரும்பாலான பேனர்களுக்கு அனுமதியும் பெறவில்லை.
வரும் 10ம் தேதி, அ.தி.மு.க.நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்திவைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், , வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கத்தின் மகள் திருமணமும் அதில் ஒன்று.
இந்த திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துத்தான் – அனுமதி இன்றி – தஞ்சையின் பிரதான சாலைகளில் எல்லாம் பேனர்களை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்திருக்கிறார்கள்.
தஞ்சை ரயில் நிலைய சாலையில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக பழைய பேருந்து செல்லும் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையின் இரு புறங்களிலும் பிரம்மாண்டமான பேனர்களை வைத்திருக்கிறார்கள்.
அதே போல கீழவாசல் மார்க்கெட் சாலையும் நெருக்கடி மிகுந்த பகுதி. இங்கும் பேனர்கள்.
சோழன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை மறைத்தும் பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.
பெரிய சைசில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கம்புகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு காற்றில் ஆடுகின்றன. பொதுமக்கள் அச்சத்துடனே சாலைகளை கடக்க வேண்டியிருக்கிறது.
இன்று காலைதான் கோவை சரவணம்பட்டியில் அ.தி.மு.கவினர் வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டது. அது போல இங்கும் ஏதும் நடந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள் தஞ்சை மக்கள்.
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையில் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டன அல்லவா? இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் அ.தி.மு.க.வினருக்கு நினைவில்லை போலும்.
அதுமட்டுமல்ல… தமிழகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க, குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன்பும், நடந்த பிறகு இரண்டு நாட்களுக்கு மட்டும் விளம்பர தட்டிகள் வைத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் ஆணையே உள்ளது.
ஆனால் நாளை மறுநாள் நடக்க இருக்கும் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மகள் திருமணத்துக்கு பல நாட்கள் முன்பாகவே இந்த பேனர்கள் வைக்கப்பட்டுவிட்டன.
இதில் இன்னொரு கொடுமை.. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பெரிய பேனர் ஒன்று இப்போதும் காற்றில் படபடப்பாக ஆடிக்கொண்டிருக்கிறது.
அதே போல, இப்படி வைக்கப்படும் பேனர்களுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, அதன் நகலையும் குறிப்பிட்ட விளம்பர போர்டில் அச்சடிக்க வேண்டும்.
இப்போது அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மகள் திருமணத்துக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அந்த எண்களும் இல்லை.
சட்டம் ஒரு புறம் இருக்கட்டும்.. ஏற்கெனவே பேனர்களால் பல விபத்துக்களும் உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. அப்படி நடக்காமல் இருப்பதற்காகவாவது இந்த பேனர்களை உடனடியாக அகற்றட்டும்.
அதுபற்றியும் கவலைப்படாவிட்டாலும்… இன்னொரு விசயத்தை யோசிக்கட்டும்.
இந்த பேனர்களால் பொதுமக்கள் கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஓர் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டுமா என்பதையாவது யோசிக்கட்டும்.
- டி.வி.எஸ். சோமு