காஷ்மீர்
பஹல்காம் தாக்குதலால் அமர்நாத் யாத்திரை முன்பதிவில் 10% சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த குகைக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அப்போது இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் இந்த யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதன் எதிரொலியாக காஷ்மீரில் சுற்றுலாத்துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் சுமார் 10 சதவீதம் சரிவை சந்திந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 22-ந்தேதிக்கு முன்பு வரை சுமார் 2.36 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்திருந்ததாகவும், அதன் பிறகு முன்பதிவு எண்ணிக்கு கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.